Watch Video SAvsIND| சித்தார், ட்ரம்ஸ் கருவிகளுடன் இந்திய வீரர்களுக்கு கேப்டவுனில் உற்சாக வரவேற்பு- வைரல் வீடியோ!
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 11ஆம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணியின் வீரர்களும் நேற்று கேப்டவுன் சென்றடைந்தனர். கேப்டவுனில் இந்திய வீரர்களுக்கு சித்தார் இசைக்கருவி மற்றும் தென்னாப்பிரிக்காவின் ட்ஜெம்பே ட்ரம்ஸ் இசைக்கருவி ஆகியவற்றுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Touchdown Cape Town 📍🇿🇦#TeamIndia #SAvIND pic.twitter.com/TpMtyPK9FG
— BCCI (@BCCI) January 8, 2022
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி பங்கேற்பார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். ஆகவே அவர் இந்தப் போட்டியில் பங்கேற்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துவிடும். அதேபோல் இந்திய அணியின் பேட்டிங் தான் வழக்கம் போல் மிகவும் மோசமாக உள்ளது. அதை சரி செய்ய இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானே மற்றும் புஜாரா ஒரளவு ரன்கள் அடித்தனர். இதனால் அவர்களுக்கு மூன்றாவது டெஸ்டில் மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம் என்று அணி நிர்வாகம் கருதுவதாக தெரிகிறது. ஆகவே இந்திய அணியில் விராட் கோலியின் வருகை தவிர வேறு எந்தவித மாற்றமும் பெரிதாக இருக்காது என்று கருதப்படுகிறது. கடந்த போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரளவு மீண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரும் இந்தப் போட்டியில் பங்கேற்பார் என்று கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. கேப்டவுனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றால் கேப்டன் விராட் கோலிக்கு அதுவும் ஒரு பெரிய மையில்கல்லாக அமையும்.
மேலும் படிக்க: சச்சின் ரசிகர்களை இப்படி பண்றீங்களா.. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் குறித்து சச்சின் தரப்பின் கருத்து..