"நானும் பெஸ்ட் ஸ்பின்னர்தான்! டெஸ்ட் ஆட ரெடியா இருக்கேன்" உத்வேகத்துடன் தமிழக வீரர் சாய் கிஷோர்
நாட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் நானும் ஒருவன் என உணர்கிறேன் என்றும், டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தயாராக உள்ளதாகவும் தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் முன்னாள் சாம்பியன் குஜராத் அணிக்காக ஆடி அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் சாய் கிஷோர். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் தற்போது குணம் அடைந்து வருகிறார்.
கடுமையான பயிற்சி:
மேலும், மீண்டும் கிரிக்கெட் ஆடுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “நான் இப்போது மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதுபோன்று பயிற்சியை நான் இதற்கு முன்பு எடுக்கவில்லை. ஐ.பி.எல்.க்கு முன்பு வேண்டுமானால் எடுத்திருக்கலாம். அதிகாலை 4 மணிக்கு எழுந்து பயிற்சி மேற்கொண்டு பந்துவீசுகிறேன்.
கடந்த 4-5 ஆண்டுகளில் இதுபோன்று கிரிக்கெட் தொடருக்கு முன்பு இதுபோன்று நேரத்தை ஒதுக்கவில்லை. ஐ.பி.எல். தொடரில் இதுபோன்று உங்களுக்கு நேரம் கிடைக்காது. நீங்கள் மீண்டு வருவதிலேதான் கவனம் செலுத்துவீர்கள். டி.என்.பி.எல்.க்கு பிறகு 15-20 நாட்கள் இடைவௌி கிடைத்தது. அது சிறப்பானதாகவும் இருந்தது.
டெஸ்ட் ஆடத் தயார்:
நாட்டின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் நானும் ஒருவன் என்று என்னை உணர்கிறேன். என்னை டெஸ்ட் போட்டிகளில் சேர்த்தால் நான் ஆடுவதற்கு தயாராக உள்ளேன். அதனால், நான் பெரிதும் கவலைப்பட மாட்டேன். ஜடேஜா அங்கு இருக்கிறார். அவருடன் இதற்கு முன்பு இணைந்து ஆடியதில்லை. அவருடன் சி.எஸ்.கே.வில் இணைந்து இருந்தேன். ஆனால், அவருடன் இணைந்து சிவப்பு நிற பந்தில் விளையாடியதில்லை. அவர் என்ன செய்கிறார் என்பதை பார்த்து கற்றுக்கொள்வதில் இது ஒரு அனுபவமாக இருக்கும். அதைத்தான் நம்பிக்கையாக உணர்கிறேன்.
புச்சிபாபு கிரிக்கெட்டில் ஆடுவதற்கு முக்கிய காரணம் 50 ஓவர்கள் வரை பந்து வீச தயாராக இருப்பதே ஆகும். நான் புச்சிபாபு கிரிக்கெட் ஆட விரும்புகிறேன். இதுபோன்ற கிரிக்கெட்டை என்னால் ஆட முடியும். சில நேரங்களில் காயங்கள் கூட ஆசிர்வாதமாக இருக்கலாம். சில நேரங்களில் கிரிக்கெட் வீரர்கள் அதிகமாக கிரிக்கெட் ஆடி சலிப்படைவார்கள். எனக்கு அது அவ்வளவாக நடக்காது. பெரும்பாலானவர்களுக்கு நடக்கும். 50 ஓவர்கள் பந்துவீச வேண்டுமென்றால் நான் மகிழ்ச்சியுடன் செய்வேன். இது ஒரு ஆசீர்வாதம்."
இவ்வாறு அவர் பேசினார்.
27 வயதான சாய் கிஷோர் இதுவரை 3 டி20 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர 39 முதல்தர போட்டிகளில் ஆடி 166 விக்கெட்டுகளையும், 54 லிஸ்ட் ஏ கிரிக்கெட் ஆடி 92 விக்கெட்டுகளையும், 62 டி20 போட்டிகளில் ஆடி 70 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக திகழ்கிறார்.