SA Vs Aus Semi Final: 1999 உலகக்கோப்பை அரையிறுதியில் நடந்தது என்ன? ஆஸ்திரேலியாவை பழிவாங்குமா தென்னாப்ரிக்கா
SA Vs Aus Semi Final: 1999ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது தென்னாப்ரிக்கா அணிக்கு இன்றும் ஆறாத வடுவாக தொடர்கிறது.
SA Vs Aus Semi Final: ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா இடையேயான போட்டி என்றாலே, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் 1999ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டி நினைவிற்கு வருவது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தென்னாப்ரிக்கா - ஆஸ்திரேலியா அரையிறுதி:
இந்தியாவில் கடந்த மாதம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றும் வரும், உலகக் கோப்பை பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேநேரம், 1999ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு தென்னாப்ரிக்கா அணி பழிவாங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த அந்த வெற்றி வாய்ப்பை இழந்ததன் விளைவாக தான், உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லாத ஒரே நட்சத்திர அணியாக உள்ளது. இந்த மோசமான வரலாற்றிற்கு காரணமான அந்த போட்டியில் அப்படி என்ன நிகழ்ந்தது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்..
1999ம் உலகக் கோப்பை அரையிறுதி..!
1999ம் ஆண்டு ஜுலை 17ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா அணிகள் முதன்முறையாக மோதின. இதில் டாஸ் வென்ற ஹன்ஸி க்ரோஞ்ச் தலைமையிலான தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 68 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஸ்டீவ் வாக் மற்றும் மைக்கெல் பெவன் ஆகியோர் பொறுப்பாக ஆடி அரைசதம் விளாச, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 213 ரன்களை மட்டுமே சேர்த்தது.
தென்னாப்ரிக்காவிற்கு கிடைத்த தொடக்கம்:
எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணிக்கு கிப்ஸ் மற்றும் கேரி கிறிஸ்டன் கூட்டணி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. இருப்பினும் அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகளால் 61 ரன்களை சேர்ப்பதற்குள், தென்னாப்ரிக்காவின் நட்சத்திர வீரர்கள் நான்கு பேர் பெவிலியன் திரும்பி இருந்தனர். உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லும் கனவு முடிந்தது என தென்னாப்ரிக்க ரசிகர்கள் துவண்டு இருக்க, அவர்களை மீண்டும் நிமிர்ந்து உட்கார செய்தது காலிஸ் மற்றும் ஜாண்டி ரோட்ஸ் கூட்டணி. இந்த கூட்டணி பொறுப்பாக விளையாடி 5வது விக்கெட்டிற்கு 84 ரன்களை சேர்த்தது. இதையடுத்து பொல்லாக்கும் காலிஸ் உடன் சேர்ந்து 30 ரன்களை சேர்த்து இலக்கு கைக்கு எட்டும் தூரத்திற்கு வந்தது.
கைகளுக்கு எட்டிய வெற்றி:
ரன்கள் சேர்ந்து கொண்டு இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்தன. ஒரு கட்டத்தில் தென்னாப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. வெற்றியை தேடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், 49 ஓவரில் பவுச்சர் கிளீன் போல்டானார். அதே ஓவரில் எல்வொர்த்தி ரன் - அவுட்டும் ஆனார். இருப்பினும் அதே ஓவரில் க்ளூஸ்னெர் ஒரு சிக்சர் விளாச கடை ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
கனவுகளை நொறுக்கிய ரன் - அவுட்:
கடைசி ஓவரில் க்ளூஸ்னெர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி, போட்டி சமனிற்கு வந்தது. அவ்வளவு தான் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, தென்னாப்ரிக்கா அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். கடைசி 3 பந்துகளில் வெறும் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஓவரின் நான்காவது பந்தை க்ளூஸ்னெர் நேராக அடித்து மறுமுனைக்கு ஓடிவந்தார். ஆனால், இதனை சற்றும் கவனிக்காமல் ஆலன் டொனால்ட் அப்படியே நிற்க, ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால், ஒட்டுமொத்த தென்னாப்ரிக்கா ரசிகர்களும் அதிர்ச்சியில் மூழ்கினர். அதிலிருந்து அவர்கள் மீள்வதற்குள்ளாகவே ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையையும் வென்றது.
அந்த தோல்வி இன்றளவும் தென்னாப்ரிக்க அணியின் மனதிற்குள் ஓடிக்கொண்டு தான் உள்ளது. அந்த ஆறாத வடுவிற்கு இன்றைய போட்டியின் மூலம் தென்னாப்ரிக்கா அணி, ஆஸ்திரேலியாவை பழிவாங்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.