Rohit Sharma: 12 ரன்னில் பறிபோன 11 ஆயிரம் ரன்! அவரைப் பின்னுக்குத் தள்ளிருக்கலாமே ரோகித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியி்ல் 1 ரன்னில் அவுட்டான ரோகித் சர்மா 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை தவறவிட்டார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ரோகித் அவுட்:
இதன்படி, ஆட்டத்தை இந்திய கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன்கில் தொடங்கினர். கடந்த போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா மீது இந்த போட்டியிலும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் மார்க் வுட் பந்தில் சால்டிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் அவுட்டானார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 13 ரன்கள் எடுத்திருந்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை எடுத்திருப்பார். ஆனால், 1 ரன்னில் ஆடடமிழந்ததால் அந்த சாதனையை படைக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். ரோகித்சர்மா முதல் போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் 119 ரன்னில் அவுட்டானார்.
12 ரன்னில் தவறிய சாதனை:
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா சதம் அடித்து ஒருநாள் போட்டியில் ஃபார்முக்குத் திரும்பியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால், இந்த போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 1 ரன்னில் அவுட்டானார். 12 ரன்னில் அவர் 11 ஆயிரம் ரன்களை எடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இருப்பினும், அடுத்து நடக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சச்சின் சாதனை மிஸ்:
ரோகித் சர்மா இதுவரை 266 ஒருநாள் போட்டியில் 260 இன்னிங்சில் ஆடி 10 ஆயிரத்து 988 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 இரட்டை சதங்களும், 32 சதங்களும், 57 அரைசதங்களும் அடங்கும். மேலும், இந்த போட்டியில் மட்டும் அவர் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தால் கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருப்பார். அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை சச்சினை பின்னுக்குத் தள்ளி தன்வசப்படுத்தியிருப்பார்.
இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபியில் அந்த சாதனையை படைக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவிற்கு இன்னும் உள்ளது. சச்சின் டெண்டுல்கர் தனது 284வது ஒருநாள் போட்டியில் அந்த சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி வைத்துள்ளார். அவர் 230 போட்டிகளில் வெறும் 222 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
3 இந்தியர்கள்:
சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 9 வீரர்கள் மட்டுமே ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.



















