Rishabh Pant: "நான் அடிச்சா தாங்கமாட்டா.." சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டின் சீறும் சிங்கம் ரிஷப்பண்ட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரிஷப்பண்ட் தான் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் அசாத்தியமான பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட். பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான இவர் பல்வேறு நெருக்கடியான சூழலில் இந்திய அணியை கரை சேர்த்துள்ளார்.
சதம் விளாசிய ரிஷப்பண்ட்:
3 வடிவிலான போட்டியிலும் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உலா வந்த ரிஷப்பண்ட் அடிக்கடி காயத்தில் சிக்குவதால் அவர் தற்போது டெஸ்ட் அணியில் மட்டும் தொடர்ந்து ஆடி வருகிறார். சிவப்பு நிற பந்தில் அதிரடியாக ஆடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. வெள்ளை நிறப் பந்தில் ஆடுவது போல சிவப்பு நிற பந்தில் அதிரடியாக ஆடுவது மிக மிக கடினம்.
ஆனால், அந்த கடினமான செயலை ரிஷப்பண்ட் பல முறை செய்துள்ளார். குறிப்பாக, வெளிநாட்டு மண்ணில் இதை எளிதாக செய்துள்ளார். அப்படி ஒரு அதிரடியை மீண்டும் வெளிக்காட்டியுள்ளார் ரிஷப்பண்ட். இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரிஷப்பண்ட் நியூசிலாந்து மண்ணில் அசத்தலான சதம் விளாசினார்.
ருத்ரதாண்டவம்:
களமிறங்கியது முதலே பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய ரிஷப்பண்ட் இந்திய அணி 700 ரன்களை கடப்பதற்கு உறுதுணையாக இருந்தார். மேட் ஹென்றி, ஜேமிசன், ஜேக்கப் டஃபி, ஸ்மித், பிலிப்ஸ், ரவீந்திரா, மிட்செல் என அனைவரது பந்தையும் விளாசித் தள்ளினார். ஒருநாள் போட்டி போல ஆடிய ரிஷப்பண்ட் 153 பந்துகளில் 10 பவுண்டரி 6 சிக்ஸருடன் 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வரலாறு:
இந்த சதம் மூலமாக ரிஷப்பண்ட் புதிய வரலாறு படைத்துள்ளார். தென்னாப்பிரக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்தியராக இந்த சாதனையை முதலில் படைத்தவரும் இவரே ஆவார்.
29 வயதான ரிஷப்பண்ட் இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 853 ரன்களை விளாசியுள்ளார். அதில் 9 சதங்கள் அடங்கும். 21 அரைசதங்களும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர் என்ற சாதனைப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு ரிஷப்பண்ட் முன்னேறியுள்ளார்.
தவிர்க்க முடியாத வீரர்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் தன் வசம் வைத்துள்ளார். 138 சிக்ஸர்கள் அவர் விளாசியுள்ளார். மேலும், சேனா நாடுகளில் சதம் விளாசிய 6வது இந்தியர் என்ற சாதனையையும் ரிஷப்பண்ட் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முகமது அசாரூதின், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட், கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர்.
ரிஷப்பண்டை சில தொடர்களில் இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்து வரும் நிலையில், ரிஷப்பண்ட் கண்டிப்பாக அனைத்து வடிவ போட்டியிலும் இடம்பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவரும் தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலே சதம் விளாசி அசத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















