Ranji Trophy: புதுச்சேரிக்கு எதிராக படுதோல்வி; கேப்டன் யாஷ் துல்லை அதிரடியாக நீக்கிய டெல்லி அணி நிர்வாகம்
Ranji Trophy: நடப்பு ரஞ்சிக் கோப்பையானது மிகவும் நடைபெற்று பரபரப்பாக வருகின்றது. இதில் மொத்தம் 38 அணிகள் களமிறங்கி குழு அளவிலான போட்டிகளில் விளையாடி வருகின்றது.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் புதுச்சேரி அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் டெல்லி அணியின் கேப்டன் யாஷ் துல்லை அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதுதான் தற்போது ரஞ்சிக் கோப்பை வட்டாரத்தில் பேசப்படும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் நடைபெறக்கூடிய மிகவும் முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட். அதிகப்படியான அணிகள் களமிறங்கும் இந்த ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டினால் வளர்ந்து வரும் இளம் வீரர்கள் முதல் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் வரை கலந்துகொண்டு விளையாடுவார்கள்.
அவ்வகையில் நடப்பு ரஞ்சிக் கோப்பையானது மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 38 அணிகள் களமிறங்கி குழு அளவிலான போட்டிகளில் விளையாடி வருகின்றது. மொத்தம் உள்ள 4 குழுவிலும் உள்ள தகுதிபெற்ற அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி குரூப் ’டி’ இல் அங்கம் வகிக்கும் புதுச்சேரி மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டது. டெல்லி அணியை அதிரடி பேட்ஸ்மேனாக வளர்ந்து வரும் யாஷ் துல் கேப்டனாக இருந்து வழிநடத்தினார். இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற புதுச்சேரி அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. சொந்த மண்ணில் களமிறங்கும் டெல்லி அணி சிறப்பான தொடக்கத்தினை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து டெல்லி அணியை சின்னாபின்னமாக்கியது புதுச்சேரி அணி. குறிப்பாக புதுச்சேரி அணியின் பந்து வீச்சாளர் குருராவ் யாதவ் டெல்லி அணியின் டாப் ஆர்டர் தொடங்கி டைல் எண்டர்ஸ் வரை மொத்தம் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து களமிறங்கிய புதுச்சேரி அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணி முதல் இன்னிங்ஸைப் போலவே சொதப்பியது. இந்த முறை டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் 145 ரன்களுக்கு இழந்தது. அதன் பின்னர் களமிறங்கிய புதுச்சேரி அணி ஒரு விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த அதிர்ச்சிகரமான தோல்விக்குப் பின்னர், டெல்லி அணி நிர்வாகம் தங்களது கேப்டன் யாஷ் துல்லை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது. இதற்கு டெல்லி அணி தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், யாஷ் துல் மிகவும் திறமையான வீரர். இளம் வீரரான யாஷ் துல் தற்போது பேட்டிங்கில் தடுமாறி வருகின்றார். அவர் தனது பேட்டிங்கில் முழு கவனம் செலுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் அவரிடம் இருந்து கேப்டன் பொறுப்பு அணியில் இருக்கும் பேட்ஸ்மேனான ஹிமாத் சிங் வரும் போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார் என தெரிவித்துள்ளது. யாஷ் துல் கடந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.