(Source: ECI/ABP News/ABP Majha)
Ranji TN vs MUM: இன்று அரையிறுதியில் மோதல்! ரஞ்சி இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது தமிழ்நாடா? மும்பையா?
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - மும்பை அணிகள் இன்று அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருவதற்கு முன்பு இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடராக விளங்கியது ரஞ்சி கிரிக்கெட் தொடர் ஆகும். ரஞ்சி கிரிக்கெட் தொடரில் ஆடி தன்னை நிரூபிக்கும் வீரர்களுக்கே இந்திய அணியில் அப்போது வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு - மும்பை:
இந்த தொடர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், தொடர் தொடங்கியது முதலே அபாரமாக ஆடி வந்த தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியது. தமிழ்நாடு அணி தனது அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ஆடுகிறது. இரு அணிகளும் மோதும் 2வது அரையிறுதி போட்டி இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு அணியுடன் ஒப்பிடும்போது மும்பை அணி பலமிகுந்த அணியாக உள்ளது. மும்பை அணியில் இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட ரஹானே கேப்டனாக உள்ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே ஆகியாருடன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் அசத்திய முஷீர்கான், ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக ஆடிய துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் உள்ளனர். துஷார் தேஷ்பாண்டே கடந்த போட்டியில் 11வது வீரராக களமிறங்கி சதம் அடித்தது அந்த அணியின் உத்வேகத்தை மேலும் அதிகரித்திருக்கும்.
தமிழ்நாடு அணி பலம்:
தமிழ்நாடு அணியை சாய் கிஷோர் வழிநடத்துகிறார். தமிழ்நாடு அணியின் பலமாக ஜெகதீஷன், விஜய் சங்கர், பாபா இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர். சாய் சுதர்சன் ஆகியோர் உள்ளனர். தமிழ்நாடு அணி வீரர்கள் தங்களது முழு திறனையும் பேட்டிங், பவுலிங்கில் வெளிப்படுத்தினால் மட்டுமே அரையிறுதியில் ஆதிக்கத்தை செலுத்த முடியும்.
7 வருடத்திற்கு பிறகு தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனால், இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அணி முழுமூச்சுடன் ஆடுவார்கள். இந்த போட்டி இன்று காலை 9.30 மணிக்கு மும்பையில் உள்ள சரத்பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
பேட்டிங்கில் ஜொலிப்பார்களா?
சொந்த மண்ணில் ஆடுவது மும்பை அணிக்கு பலமாக இருந்தாலும், தமிழ்நாடு அணியினர் சிறப்பாக இந்த தொடர் முழுவதும் ஆடி வருவது அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.. சாய் கிஷோர், அஜித் ராம், வாரியர் சிறப்பாக பந்துவீசுகின்றனர். பேட்டிங்கில் பாபா இந்திரஜித், ஜெகதீஷன், விஜய் சங்கர் சிறப்பாக ஆடினால் தமிழ்நாடு அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங், பவுலிங்கில் அசத்தி வருகிறார்.
மும்பை அணியிலும் ரஹானே, முஷீர்கான், பிரித்விஷா, ஷிவம் துபே சிறப்பாக ஆடினால் தமிழ்நாடு அணிக்கு நெருக்கடி ஏற்படும். அவர்களை விரைவில் வீழ்த்த வேண்டியது தமிழ்நாடு அணிக்கு அவசியம் ஆகும். முதல் அரையிறுதி போட்டியில் விதர்பா – மத்திய பிரதேசம் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: IPL Records: ஐ.பி.எல் தொடரில் அதிக கேட்ச்... குட்டி தல சுரேஷ் ரெய்னாவின் சாதனை! விவரம் இதோ!