PSL Final: தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்ற முதல் அணி… 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற லாகூர் அணி!
25,000 பேர் கொண்ட ஸ்டேடியம் நிரம்பி வழிய, 20 ஓவர்களில் கலந்தர்ஸ் அணி 200-6 ரன்களை எடுத்தது. சுல்தான்ஸ் 199-8 ரன்களை மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
'த்ரில்'ஆன இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் பட்டத்தை தொடர்ந்து இரண்டாம் முறையாக வென்ற முதல் அணியாக லாகூர் கலந்தர்ஸ் ஆனது.
த்ரில் இருதிபோட்டி
கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமின்றி, முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 44 ரன்களை குவிக்க, நேற்றைய ஆட்டம் முழுவதும் ஷஹீன் 'ஷோ'வாக இருந்தது. கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முல்தானின் குஷ்தில் ஷாவால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. ஆனால் மூன்றாவது ரன் ஓடி சூப்பர் ஓவருக்காவது எடுத்து செல்லலாம் என்று நினைத்த அவர் ரன் அவுட் ஆனார். லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இந்த பரபரப்பான போட்டியை காண 25,000 பேர் கொண்ட ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. 20 ஓவர்களில் கலந்தர்ஸ் அணி 200-6 ரன்களை எடுத்தது. சுல்தான்ஸ் 199-8 ரன்களை மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இரண்டாவது முறை கோப்பை வெல்லும் முதல் அணி
கடந்த ஆண்டு இறுதிப் போட்டியிலும் சுல்தான்ஸ் அணியைதான் கலந்தர்ஸ் அணி தோற்கடித்திருந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கலந்தர்ஸ் அணியின் ஆதிக்கம் தொடருகிறது. இந்த போட்டியில் ஷஹீன் ஷா அஃப்ரிடி ஆடிய அதிரடி பேட்டிங் எல்லோரையும் வியக்க வைத்தது. சொந்த அணியினரே அவரது ஆட்டத்தால் அசந்து போயினர். அவர் வந்து களம் இறங்குவதற்கு முன் கடுமையான சரிவில் இருந்தது கலந்தர்ஸ் அணி. ஷஹீன் பேட்டிங் செய்ய வந்த போது லாகூர் கலண்டர்ஸ் 14.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் லாகூர் கலந்தர்ஸ் 85 ரன்கள் எடுத்தது. இதில் 5 சிக்ஸர்களை மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி 44 ரன்கள் குவித்த ஷஹீன் ஷா அப்ரிடியின் ஆட்டம் குறிப்பிடத்தக்கது.
நல்ல தொடக்கம் தந்த சுல்தான்ஸ்
201 ரன்னை டார்கெட்டாக கொண்டு ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியினர் நன்றாகவே தொடங்கினர். ஷாஹீன் தனது தொடக்க இரண்டு ஓவர்களில் 34 ரன்களை விட்டுக்கொடுத்தார். சுல்தான்ஸ் 10 ஓவர்களில் 101-1 ரன்களை எடுத்து நல்ல நிலையில் இருந்தது. ரைலி ரோசோவ் (52) மற்றும் முகமது ரிஸ்வான் (34) இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன்களைச் சேர்த்தனர். ரோசோவ் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விளாசினார். ஆனால் ஷாஹீன் தனது இரண்டாவது ஸ்பெல்லில் கீரன் பொல்லார்ட் (19), டிம் டேவிட் (20), அன்வர் அலி (ஒன்று), உசாமா மிர் (0) ஆகியோரை அதிரடியாக வெளியேற்றி முதல் இன்னிங்சில் செய்தது போலவே இரண்டாம் பாதியை தன் வசமாக்கினார்.
ஷஹீன் ஷா அஃப்ரிடி ஆதிக்கம்
கடைசி இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹாரிஸ் ரவுஃப் வீசிய 19வது ஓவரில் ஷா மற்றும் அப்பாஸ் அப்ரிடி 22 ரன்கள் எடுத்தனர். ஆனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்றனர். "நாங்கள் மீண்டும் இறுதிப் போட்டிக்கு வந்து, இரண்டாவது முறையாக பட்டத்தை வென்றோம், அது எங்கள் குழுவின் செயலுக்கு கிடைத்த வெகுமதியாகும். நாங்கள் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடினோம், ஆனால் இது ஒரு த்ரில் வெற்றியாகும்", என்று ஷாஹீன் கூறினார். கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஜமான் நல்ல தொடக்கத்தை தந்தாலும், அவர் ஆட்டமிழந்தவுடன், கலாண்டர்ஸ் அடுத்த 18 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 112-5 என்று சரிந்தது. வேகப்பந்து வீச்சாளர் இஹ்சானுல்லாவின் 17வது ஓவரில் அவரும் ஷபீக்கும் 24 ரன்கள் எடுத்ததால், ரன் வேகம் எகிறியது. இறுதியில் ஷஹீன் ஷா ஆடிய ஆட்டமே போராடத்தக்க இலக்கை நிர்ணயிக்க உதவியது என்பதாலும், முக்கியமான 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதாலும் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.