Zimbabwe Cricket Record: வரலாற்று சாதனை படைத்த ஜிம்பாப்வே.. உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் 408 ரன்கள் குவிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் அமெரிக்காவிற்கு எதிராக 400 ரன்களை குவித்து ஜிம்பாப்வே அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் அமெரிக்காவிற்கு எதிராக 400 ரன்களை குவித்து ஜிம்பாப்வே அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உலகக்கோப்பை தகுதிச்சுற்று:
நடப்பாண்டு இறுதியில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கு இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான, தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
ஜிம்பாப்வே - அமெரிக்கா மோதல்:
இந்த நிலையில் நடைபெற்ற குரூப்-ஏ லீக் போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஹராரே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அமெரிக்காவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
சீன் வில்லியம்ஸ் ருத்ரதாண்டவம்:
குறிப்பாக சீன் வில்லியம்ஸ் அமெரிக்காவின் பந்துவீசை அடித்து நொறுக்கினார். இதன் மூலம், வெறும் 101 பந்துகளிலேயே 174 ரன்களை குவித்தார். இதில் 21 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். இதை கண்ட மைதானத்தில் குவிந்திருந்த உள்ளூர் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மைதானமே மகிழ்ச்சி வெள்ளத்தில் எழுப்பிய கரகோசங்களால் அதிர்ந்தது.
400 ரன்களை குவித்த ஜிம்பாப்வே:
கும்பி, சிகந்தர் ராஜா, ரியன் பர்ல் ஆகியோரும் அதிரடியான ஆட்டட்தை வெளிப்படுத்தினர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஜிம்பாப்வே அணி 408 ரன்களை குவித்தது. அமெரிக்க அணி சார்பில் அபிஷேக் பரத்கர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே புதிய சாதனை:
ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே 400 ரன்களை கடப்பது இதுவே முதன்முறையாகும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னதாக கென்யா அணிக்கு எதிராக 351 ரன்களை குவித்ததே, ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது.
புள்ளிப்பட்டியல்:
உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் ஜிம்பாப்வே அணி இடம்பெற்றுள்ளது. இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளை வீழ்த்தி , புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இருபிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சிக்ஸ் சுற்றுக்குள் நுழையும். தொடர்ந்து, இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள், உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதி பெறும்.
உலகக்கோப்பை அட்டவணை:
நடப்பாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை ஜூன் 27-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட உள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் என்றும், உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 31-ந் தேதி தொடங்கும் என்றும் வதந்திகள் பரவி வரும் நிலையில், நாளை வெளியாகும் அறிவிப்பின் அடிப்படையில் எப்போது உலகக்கோப்பை தொடர் தொடங்கும்? என்பது தெரிய வரும்.