IND Vs NED, Match Highlights: 160 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி; நெதர்லாந்தை வீழ்த்தி தீபாவளி போனஸை அள்ளிய இந்தியா..!
IND Vs NED, Match Highlights: இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயஸ் ஐயர் 94 பந்தில் 128 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கோலாகளமாக தொடங்கிய ஐசிசியின் 13வது உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கின. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். இதில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தினை எட்டியுள்ளது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியாவும் நெதர்லாந்தும் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மோதிக்கொண்டது. ஏற்கனவே இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்த போட்டி அட்டவணைப்படி நடத்தப்பட்டது.
40 ஓவர்களுக்கு மேல் அதிரடியாக விளையாடிய ஸ்ரெயஸ் ஐயர் தனது சதத்தினை எட்டினார். இது உலகக்கோப்பையில் அவரது முதல் சதம் ஆகும். ஸ்ரேயஸ் ஐயர் சதம் விளாசிய பின்னர் கே.எல். ராகுலுக்கு அதிகப்படியான ஸ்ட்ரைக்கைக் கொடுத்தார். இதனால் கே.எல். ராகுல் சதத்தை நோக்கி முன்னேறினார். கே.எல். ராகுல் 102 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயஸ் ஐயர் 94 பந்தில் 128 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.
அதன் பின்னர் 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் விக்கெட் வீழ்ந்தாலும், நெதர்லாந்து அணியின் பேட்டிங் முதல் 10 ஓவர்களில் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தியாவின் டாப் பந்து வீச்சாளர்களை அசால்டாக எதிர்கொண்டு பவுண்டரிகள் விளாசினர். இதனால் இந்திய அணிக்கு விக்கெட்டுகள் வீழ்த்த சவாலான சூழல் ஏற்பட்டது. நெதர்லாந்து அணி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி அதகளப்படுத்தினர்.
இரண்டாவது விக்கெட்டினை குல்தீப் யாதவ் மூன்றாவது விக்கெட்டினை ஜடேஜா, நான்காவது விக்கெட்டினை விராட் கோலி என வரிசையாக விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்தினர். இதற்கிடையில் முகமது சிராஜ்க்கு கேட்ச் பிடிக்க முயற்சி செய்தபோது காயம் ஏற்படவே, கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் விராட் கோலி, சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை பந்து வீசவைத்தார். பெங்களூரு மைதானத்தில் விராட் கோலி பந்து வீசியதால் ரசிகர்கள் ஆரவராமாக காணப்பட்டனர்.
நெதர்லாந்து அணியின் ஆட்டத்தினை பார்த்தபோது வெற்றியை எட்டுவதைவிட 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்யவேண்டும் எனும் நோக்கில் விளையாடியதைப் போல் இருந்தது. இதனால் நெதர்லாந்து அணி பொறுமையாகவே விளையாடியது. இறுதியில் நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த தொடர் முழுவதும் விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தரப்பில் இந்த போட்டியில் மொத்தம் 9 வீரர்கள் அதாவது ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் தவிர அனைவரும் பந்து வீசினர். 128 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேய்ஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.