IND vs PAK WC: உலகக் கோப்பையில் ஆதிக்கம்; இந்தியாவுக்கு எதிராக தொடரும் பாகிஸ்தானின் சோகம் - இதுவரை எப்படி?
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று (அக்டோபர் 14) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை (2023) உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மொத்தம் 8 ஆட்டங்களில் நேரடியாக மோதி உள்ளது. இதில் எட்டு போட்டிகளிலுமே இந்திய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
1992-ல் முதல் போட்டி:
கடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதன் முதலில் மோதின. இதில், 49 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது.
பின்னர் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்களது வெற்றி கணக்கை தொடங்கியது.
அதிகபட்சமாக அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 62 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 54* ரன்கள் எடுத்தார்.
1996-ல் இரண்டாவது போட்டி:
1996 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா இரண்டாவது முறையாக மோதியது. அந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது.
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
1999-ல் மூன்றாவது போட்டி:
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக பாகிஸ்தானை எதிர் கொண்டது இந்திய அணி. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. பின்னர், 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.
ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தான் தழுவியது. அந்த அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணியின் ஹாட்ரிக் வெற்றியாக பார்க்கப்பட்டது.
2003-ல் நான்காவது போட்டி:
கடந்த 2003 ஆம் ஆண்டு நான்காவது முறையாக பாகிஸ்தானை எதிர் கொண்டது இந்தியா அணி. இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு மொத்தம் 273 ரன்கள் எடுத்தது.
பின்னர், 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி. 45.4 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணியினர் அடித்த ரன்னை சேஸ் செய்தது இந்தியா. 4 விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 276 ரன்கள் எடுத்து இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2011-ல் ஐந்தாவது போட்டி:
நான்கு முறை இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி எப்படியும் வெற்றி பெற்றி விட வேண்டும் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவிடம் மோதியது.
மொஹாலியில் நடைபெற்ற 2 வது அரையிறுதி போட்டியில் (2nd Semi-Final) முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த வகையில், 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
2015-ல் ஆறாவது போட்டி:
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி ஆறாவது முறையாக மோதியது. அந்த போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை குவித்தது.
301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்த போட்டியில் விராட் கோலி 126 பந்துகளில் 107 ரன்களை குவித்தார்.
2019- ஏழாவது போட்டி:
கடந்த ஆறு முறையும் என்ன நடந்ததோ அதே தான் ஏழாவது முறையும் நடந்தது. அதன்படி, ஜூன் 16 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.
இதனிடையே, 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி. இந்த போட்டியின் போது மழை குறிக்கிட்டதால், 40 ஓவர்களுக்கு 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் வெறும் 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், Duckworth–Lewis முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
8 வது முறையாக வரலாறு படைத்த இந்திய அணி:
2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தொடரில் இன்று (அக்டோபர் 14) குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.
அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில், இந்தியாவின் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் வெறும் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இந்நிலையில், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. அதாவது. 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுதது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 8 வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து சாதனை படைத்தது. அதிகபட்சமாக இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 86 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க: India vs Pakistan Match Highlights: பவுலிங் மிரட்டல்.. பேட்டிங் அசத்தல்.. பாகிஸ்தானை பஞ்சராக்கிய இந்தியா வெற்றி..!
மேலும் படிக்க: ODI WC 2023 IND Vs PAK: நிரம்பி வழியும் நரேந்திர மோடி மைதானம்.. எங்கு பார்த்தாலும் நீலம் - ஆர்ப்பரிக்கும் இந்திய ரசிகர்கள்!