IND vs SA: டாஸ் வென்று டக்கென பேட்டிங்கை எடுத்த ரோஹித் சர்மா.. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதிரடிதான் இனி!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2023 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி தொடங்கியது. கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சால் தங்களது திறமையை காட்ட முயற்சிக்கும்.
இந்தியாவின் ப்ளேயிங்-11அணியில் எந்த மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியுள்ளது. இதையடுத்து, தப்ரைஸ் ஷம்சி உள்ளே வருகிறார், இவருக்கு பதிலாக ஜெரால்ட் கோட்ஸி பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளது. ஜெரால்ட் கோட்ஸி உலகக் கோப்பை 2023ல் 14 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டாப் 10க்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற பிறகு ரோஹித் சர்மா கூறுகையில், ”இது ஒரு சிறந்த ஆடுகளம். இந்த மைதானத்தில் போட்டிகளை விளையாட விரும்புகிறேன். ஒட்டுமொத்த இந்திய அணியும் இந்த வரலாற்று மைதானத்தில் விளையாடுவதை விரும்புகிறது. எங்களது ஆட்டம்-11ல் எந்த மாற்றமும் செய்யவில்லை.” என தெரிவித்தார்.
🚨 Toss and Team Update 🚨#TeamIndia win the toss and elect to bat first in Kolkata 👌
— BCCI (@BCCI) November 5, 2023
Follow the match ▶️ https://t.co/iastFYWeDi#CWC23 | #MenInBlue | #INDvSA pic.twitter.com/gvh49Yl6gi
அதன்பிறகு பேசிய தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, “நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். ஆனால் இப்போது நாங்கள் ரன்களை துரத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது எங்களுக்கு மிகப்பெரிய நல்லதொரு சவாலாக இருக்கும். எங்களுக்குத் தெரியும்; நாம் அதிக நம்பிக்கையைப் பெற வேண்டிய ஒரு பகுதி, நாங்கள் பொறுப்புடன் பேட் செய்ய வேண்டும். நாங்கள் நல்ல நிலையான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறோம், மேலும் முன்னேற்றம் காண்போம். ஒரு மாற்றம் செய்துள்ளோம் அதில், ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலாக ஷம்சி உள்ளே வருகிறார்.” என்றார்.
இன்றைய போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள்:
இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சின், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி.
ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும்?
ஆடுகளத்தில் பவுன்ஸ் குறைவாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் அதன் சுபாவத்திற்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக் கொண்டு பேட்டிங் ஆடுவது நல்லது. ஆடுகளத்திலும் கொஞ்சம் புல் உள்ளது. இங்கு முதலில் பேட்டிங் செய்வது சிறப்பாக இருக்கலாம் என அப்போதே கணக்கிடப்பட்டது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 91வது ஒருநாள் போட்டி இதுவாகும். இதற்கு முந்தைய 90 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியே அதிக வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 50 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி 37 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.