AFG Vs PAK, Match Highlights: மட்டமான ஃபீல்டிங்; சுமாரான பவுலிங்; ஆஃப்கானிஸ்தானுக்கு வெற்றியை தூக்கி கொடுத்த பாகிஸ்தான்
AFG Vs PAK, Match Highlights: முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் முகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. குறிப்பாக மிகவும் பலமான மற்றும் அரையிறுதிக்கு கட்டாயம் முன்னேறும் அணிகள் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒரு சில அணிகள் மிகவும் மோசமான நிலையில் தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. இந்த தொடரில் புள்ளிகள் மட்டும் இல்லாமல், ரன்ரேட்டும் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பினை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் என்பதால், அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்து விளையாடு வருகின்றன.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்பதால் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் மொத்தம் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் முகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதேபோல், மிகவும் எதிர்பார்க்கப்பாட்ட ரஷித் கான் 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றப்பில்லை.
சென்னை போன்ற மைதானத்தில் 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பது மிகவும் சவாலான இலக்குதான். அதேநேரத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சினை தாக்குப்பிடித்து வெற்றி எட்டுமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் 283 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜோடி சிறப்பாக விளையாடினர். இவர்களுக்கு பாகிஸ்தான் அணியின் ஃபீல்டர்கள் நன்கு உதவவே, பவுண்டரிகளை தட்டிவிட்டுகொண்டு இருந்தனர். ஒருகட்டத்தில், ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு களத்தில் 13 வீரர்கள் விளையாடுகிறார்களோ என கிண்டல் செய்யும் அளவிற்கு பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஜோடி அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி, வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இருவரையும் வீழ்த்த பாகிஸ்தான் அணி 6 பந்து வீச்சாளர்களை பயன்படுத்திப் பார்த்தும் எளிதில் பலன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் போட்டியின் 22வது ஓவரை வீசவந்த அஃப்ரிடி, குர்பாஸின் விக்கெட்டினை வீழ்த்தினார். முதல் விக்கெட்டுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி 131 ரன்கள் சேர்த்திருந்தது.
அதன்பின்னர் வந்த ரஹ்மத் ஷா இப்ராஹிமுடன் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பணியினை சிறப்பாக மேற்கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கிடைத்த பந்துகளை எல்லைக் கோடுகளை நோக்கி விரட்டி அதிகப்படியாக 2 ரன்கள் சேர்ப்பதில் குறியாக இருந்தனர். அதேபோல் பவுண்டரிகளும் அவ்வப்போது அடித்து வந்தனர். தொடக்க வீரரான இப்ராஹிம் தனது விக்கெட்டினை 113 பந்தில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
இப்ராஹிம் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின்னர் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஆஃப்கான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆனால் அந்த நெருக்கடியை ஆஃப்கான் அணி சிறப்பாக எதிர்கொண்டு விளையாடியது. குறிப்பாக மூன்றாவது வீரராக களமிறங்கி 58 பந்துகளை எதிர் கொண்டு அதில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தினை மிகவும் நெருக்கடியான நேரத்தில் எடுத்தார் ரஹ்மத் ஷா. இறுதிவரை சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா கூட்டணி மேற்கொண்டு விக்கெட் விழ இடம் கொடுக்காமல் விளையாடினர்.
இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.