IND vs SA, T20 World Cup Final: இந்த உலகக்கோப்பையும் இல்லைன்னா ரோகித் கடல்ல குதிச்சிடுவார்: கங்குலி சொல்வது என்ன?
IND vs SA, T20 World Cup Final 2024: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றால், கேப்டன் ரோகித் சர்மா என்ன செய்வார் என கங்குலி தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
IND vs SA, T20 Worldcup Final: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி தொடர்பாக, பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐசிசி கோப்பையை வெல்லும் கனவில் இந்தியா?
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பார்படாஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி, இரவு 8 மணிக்கு தொடங்க உள்ள இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோத உள்ளன. இரண்டாவது டி20 உலகக் கோப்பையையும், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் இந்திய அணி பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஒருவேளை இந்திய அணி தோல்வியுற்றால், கேப்டன் ரோகித் சர்மா என்ன செய்வார் என்பது குறித்து, பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
கேப்டனாக்கியதில் பெருமிதம் - கங்குலி:
தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய கங்குலி, “அவர் இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். லீக் சுற்றுகளில் தோல்விகளையே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அது அவரது கேப்டன்சி மற்றும் தலைமைத்துவத் தரத்தைப் பற்றி விளக்குகிறது. இது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. காரணம், நான் BCCI தலைவராக இருந்தபோதும், விராட் கேப்டனாக தொடர விரும்பாதபோதும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் கேப்டன் பதவியை ஏற்க தயாராக இல்லாததால் அவரை சம்மதிக்க வைக்க அதிக நேரம் ஆனது. அவரை கேப்டனாக்க எங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய உந்துதல் தேவைப்பட்டது, அவருக்கு கீழ் இந்திய கிரிக்கெட் கண்டுள்ள முன்னேற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ரோகித்தை பாராட்டிய கங்குலி
ரோகித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அது மகத்தான சாதனை. ஐபிஎல் கோப்பைகளை வெல்வது என்பது சில நேரங்களில் மிகவும் கடினமானது. சர்வதேச கிரிக்கெட்டை விட, ஐபிஎல் தொடர் கடினமானது என நான் கூறவில்லை. ஐபிஎல் தொடர்களில் கோப்பையை வெல்ல 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், உலகக் கோப்பையை வெல்ல 8 முதல் 9 போட்டிகளை வென்றால் போதும். உலகக் கோப்பையை வெல்லும்போது கிடைக்கும் கவுரவும் மகத்தானது. ரோகித் அதை செய்வார் என நம்புகிறேன்.
ரோகித் கடலில் குதிப்பார் - கங்குலி:
6-7 மாதங்களில் அவர் இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் தோல்வியடைவார் என்று நான் நினைக்கவில்லை. ஏழு மாதங்களில் அவர் கேப்டன்சியின் கீழ் இரண்டு இறுதிப் போட்டிகளில் தோற்றால், ரோகித் சர்மா பார்படாஸ் கடலில் குதிப்பார். அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார், அற்புதமாக பேட்டிங் செய்தார், அது இறுதிப்போட்டியிலும் தொடரும் என்று நம்புகிறேன். இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.இறுதிப்போட்டியில் அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறேன்,. ஏனெனில் பெரிய போட்டிகளில் வெற்றி பெற அது அவசியம்" என்று கங்குலி தெரிவித்துள்ளார்.