Mohammad Amir: 17 வயதில் அறிமுகம், ஃபிக்ஸிங், 5 ஆண்டுகள் தடை, ஓய்வு, யு-டர்ன்... முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை விவரம்!
முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை எப்படி அமைந்தது, சரிந்தது மற்றும் எப்படி மீண்டு வந்தார் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
![Mohammad Amir: 17 வயதில் அறிமுகம், ஃபிக்ஸிங், 5 ஆண்டுகள் தடை, ஓய்வு, யு-டர்ன்... முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை விவரம்! mohammad amir takes back retirement know about full career from amir debut fixing and retirement details here Mohammad Amir: 17 வயதில் அறிமுகம், ஃபிக்ஸிங், 5 ஆண்டுகள் தடை, ஓய்வு, யு-டர்ன்... முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/d0a48a5f3783c486629da0dfba7216581712742474443571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலக கிரிக்கெட் வரலாற்றில் பல வேகப்பந்து வீச்சாளர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அணி. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான் மற்றும் ஷோயப் அக்தர் போன்ற தலைச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உருவாக்கி எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்துள்ளது. அந்த வரிசையில் இருக்க கூடியவர், இருந்திருக்க வேண்டியவர் முகமது அமீர். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை, பாகிஸ்தான் அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அமீர் கான்தான். அன்றைய போட்டியில், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். எனவே முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை எப்படி அமைந்தது, சரிந்தது மற்றும் எப்படி மீண்டு வந்தார் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
17 வயதில் அறிமுகம்:
இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீரின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி 2009 டி20 உலகக் கோப்பையில் அமைந்தது. குரூப் ஸ்டேஜ் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி, அனைவரையும் கவர்ந்தார். அப்போது அவருக்கு 17 வயதுதான். அந்த போட்டியில் அமீர் அதிக ரன்களை கொடுத்திருந்தாலும், தனது முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரவி போபாராவை அவுட் செய்து தனது பிரகாசமான எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டார். அமிர் தனது வேகமான மற்றும் ஸ்விங் பந்துவீச்சினால் சர்வதேச கிரிக்கெட்டில் படிப்படியாக உயர தொடங்கிய நிலையில்தான், அடுத்த வருடத்தில் அவரது வாழ்க்கை ஒரு புதிய திருப்பத்தை எடுக்கப் போகிறது என்று தெரியாமல் சுழன்றது.
5 ஆண்டுகள் தடை:
அறிமுகத்திற்கு பின் அடுத்த ஆண்டு, அதாவது 2010ல், பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது இரு அணிகளுக்கும் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இதில் கடைசி போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் பிக்சிங் செய்ததாக முகமது அமிர், முகமது ஆசிப் மற்றும் சல்மான் பட் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். மிக இளம் வயதான 18 வயதில் அமீருக்கு ஐசிசி 5 ஆண்டுகள் தடை விதித்தது. ஒருவேளை அமீர் வாழ்க்கையில் இந்த மோசமான காலம் அமையாமல் இருந்திருந்தால், உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கலாம். ஆனால் இந்த தடை காரணமாக, அவரது கேரியர் முற்றிலும் மாறியது.
2015ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம்:
தடை முடிந்த பிறகு 2015ம் ஆண்டு மீண்டும் லீக் போட்டிகளில் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி, சிறப்பாக செயல்பட்டார். இதன்பிறகு, 2016ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார் முகமது அமீர். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அமீர் மீண்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதே வேகம்தான் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இறுதிப்போட்டியில் அவரது சிறப்பான பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தியது. சுமார் 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அமீர், நிர்வாகம் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டி, டிசம்பர் 17, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
மீண்டும் பாகிஸ்தான் அணியில் தேர்வு:
சுமார் மூன்றரை வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த அமீர் தற்போது ஓய்வில் இருந்து தனது பெயரை ரிடர்ன் செய்துள்ளார். கடந்த மார்ச் 24ம் தேதி தனது ஓய்வை திரும்ப பெற்று கொண்டார். முகமது அமீருக்கு தற்போது 32 வயதாகிறது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அமீரை தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது. இதன்மூலம், எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதை கடந்து போராடி வெற்றிபெற்று ஒரு உண்மையான வீரராக உருவெடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)