Century in ICC Finals: ஐசிசி இறுதிப் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்த வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ..!
Century in ICC Finals: ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டியில் விளாசப்பட்ட சதங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கிரிகெட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனை திறமையான பேட்ஸ்மேனாக அடையாளப் படுத்துவது அசத்தலாக சதம் விளாசுவது தான். அதிலும் குறிப்பாக மிகவும் முக்கியமான போட்டியில் சதம் விளாசி அணியை வெற்றி பெறச்செய்வது அந்த வீரருக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மைல் கல்லாக கருதப்படும். கிரிக்எட் போட்டி தற்போது மூன்று வடிவங்களில் விளையாடப்படுகிறது. அதாவது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களில் சர்வதேச அளவில் விளையாடப்படுகிறது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியோ முத்தரப்பு போட்டியோ உட்பட எவ்வகை போட்டியில் சதம் விளாசினாலும் பாராட்டப்படும் வீரர்களில் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டியில் சதம் விளாசுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அப்படி இதுவரை நடைபெற்றுள்ள ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் சதம் விளாசியவர்கள் குறித்து இங்கு காணலாம்.
1975ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாய்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 102 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர், 1979ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரிச்சர்ட்ஸ் 138 ரன்கள் விளாசினார். 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது விக்கெட்டை இழக்காமல் 107 ரன்கள் சேர்த்தார். 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் இந்தியாவுக்கு எதிராக தனது விக்கெட்டை இழக்காமல் 140 ரன்கள் எடுத்திருந்தார். 2007ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் கில்கிரிஸ்ட் இலங்கைக்கு எதிராக தனது விக்கெட்டை இழக்காமல் 149 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் ஜெயவர்தனே இந்தியாவுக்கு எதிராக தனது விக்கெட்டை இழக்காமல் 103 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து போட்டிகளில் 2011ஆம் ஆண்டு மட்டும் இறுதிப் போட்டியில் சதம் விளாசி ஒரு அணி போட்டியை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபி 2017 -இல் பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் இந்திய அணிக்கு எதிராக 114 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இதுவரை இரண்டு இறுதிப் போட்டிகளை சந்தித்துள்ளது. இதில் முதல் இறுதிப் போட்டியில் சதம் அடிக்கப்படவில்லை. இந்நிலையில் இரண்டாவது உலகடெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக சதங்கள் விளாசியுள்ளனர்.