T20I Hundred: தென்னாப்ரிக்க அணியை பொளந்து கட்டிய ஜான்சன் சார்லஸ்.. டி20 வரலாற்றில் புதிய சாதனை
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஜான்சன் சார்லஸ் சர்வதேச டி-20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஜான்சன் சார்லஸ், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக சதமடித்ததன் மூலம் சர்வதேச டி-20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த மேற்கிந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேற்கிந்திய தீவுகள் - தென்னாப்ரிக்கா மோதல்:
தென்னப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகித்து வரும் நிலையில், இரண்டாவது டி-20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
ஜான்சன் ருத்ரதாண்டவம்:
மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு ரன்களை சேர்ப்பதற்குள் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில், ஜான்சன் சார்லஸ் களமிறங்கினார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய அவர், தென்னாப்ரிக்காவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன் மூலம் 46 பந்துகளில் 118 ரன்களை விளாசினார். இதில் 11 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும். குறிப்பாக தனது முதல் சர்வதேச டி-20 சதத்தை வெறும் 39 பந்துகளில் ஜான்சன் சார்லஸ் பூர்த்தி செய்தார்.
கெயிலின் சாதனை முறியடிப்பு:
தனது அபார ஆட்டத்தின் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை ஜான்சன் சார்லஸ் முறியடித்துள்ளார். அதன்படி, சர்வதேச டி-20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு 47 பந்துகளில் கெயில் சதமடித்து இருந்த நிலையில், தற்போது அந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. அதோடு சர்வதேச டி-20 போட்டிகளில் 39 பந்துகளில் சதமடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஜான்சன் சார்லஸ் பெற்றுள்ளார். அவரது அபார சதத்தால், 20 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்தது.
அதிவேகமாக சதமடித்த வீரர்கள்:
சர்வதேச டி-20 போட்டிகளில் பல வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதமடித்து பல சாதனைகளை படைத்துள்ளனர். அந்த வரிசையில், 35 பந்துகளில் சதமடித்து சர்வதேச டி-20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர்களின் பட்டியலில் தென்னாப்ரிக்காவின் டேவிட் மில்லர், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் செக் குடியரசை சேர்ந்த ச்தேஷ் விக்ரமசேகரா ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். அதேநேரம், சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். அதன்படி, 4 சதங்களுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். லீக் உள்ளிட்ட அனைத்து டி-20 போட்டிகளையும் சேர்த்து கெயில் 22 சதங்களை விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது.