IND vs WI: ஹாட்ரிக் அரைசதம்.. அதிரடி பேட்டிங்.. தோனியின் சாதனை பட்டியலில் இடம்பிடித்த இஷான் கிஷன்..
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் அரைசதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷானின் சிறப்பான பார்ம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் சிறப்பான அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் 64 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி 77 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இஷான் கிஷானின் நான்காவது அரைசதமாக பதிவானது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இஷான் கிஷன் ஐம்பது ரன்களை கடந்தார். இதன் பிறகு, ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்தார். நேற்றைய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார்.
இஷான் கிஷான் பார்ம்:
இஷான் கிஷானின் இந்த சிறந்த பார்ம் காரணமாக வருகின்ற ஒருநாள் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடம் கிட்டதட்ட உறுதியாகியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில், இஷான் கிஷன் 46 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு, இரண்டாவது போட்டியில், 55 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதேநேரம், தொடரின் நேற்றைய மூன்றாவது போட்டியில் மீண்டும் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.
தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்ததன் மூலம் இஷான் கிஷன் தனது பெயரில் வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார். அதன் அடிப்படையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் அரைசதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.
Ishan Kishan joins the rare list. pic.twitter.com/gaIsixoZLf
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 1, 2023
இதற்கு முன்னதாக இந்த சாதனையை படைத்த இந்திய வீரர்கள் பட்டியல்:
- ஸ்ரீகாந்த் vs இலங்கை (1982)
- திலீப் வெங்சர்க்கார் vs இலங்கை (1985)
- முகமது அசாருதீன் vs இலங்கை (1993)
- எம்.எஸ்.தோனி vs ஆஸ்திரேலியா (2019)
- ஷ்ரேயாஸ் ஐயர் vs நியூசிலாந்து (2020)
- இஷான் கிஷன் vs வெஸ்ட் இண்டீஸ் (2023)
போட்டி சுருக்கம்:
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 92 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷான் 64 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இது தவிர, கேப்டன் ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார். அதே சமயம் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.
இந்தியா கொடுத்த 351 ரன்களை எட்டாமல் வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களை இழந்து சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக குடாகேஷ் மோட் 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களால் 7 பேரால் இரட்டை இலக்கத்தை தாண்ட முடியவில்லை.
அதே சமயம் இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், முகேஷ் குமாருக்கு 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜெய்தேவ் உனத்கட், ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.