(Source: ECI | ABP NEWS)
INDW vs SAW WC Final: புது சாம்பியன் யார்? இந்தியா - தெ.ஆப்பிரிக்கா இன்று இறுதிப்போட்டியில் மோதல் - எதிர்பார்ப்பில் தேசம்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட்டிற்கு இணையாக மகளிர் கிரிக்கெட்டையும் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர்.
மகளிர் சாம்பியன் யார்?
இந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடங்கியது முதலே இந்திய அணி பல சவால்களை கடந்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் பலமிகுந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மறுமுனையில் வலுவான இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இந்த இரு அணிகளும் இதற்கு முன்பு மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இன்று வெற்றி பெறும் அணி புதிய வரலாறை படைக்கும்.
அசத்தும் இந்தியா:
கடந்த போட்டியில் 339 ரன்களை சேஸ் செய்ததால் இந்திய அணி மிகப்பெரிய உத்வேகத்துடன் இருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் பலமாக உள்ளது. ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் தொடக்கத்தில் ரன்களை குவித்துவிட்டால் பின்வரிசை இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறும். அரையிறுதியில் அசாத்தியமான ஆட்டத்தை ஆடிய ஜெமிமா இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அதிரடியை காட்டினால் இந்திய அணி வலுவான இலக்கையும் நிர்ணயிக்கும், வலுவான இலக்கையும் எட்டும். பின்வரிசையில் தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் அதிரடியை காட்டத் தயாராக உள்ளனர். அமன்ஜோத் கவுரும் நெருக்கடியான சமயத்தில் அசத்தலாக ஆடுவார் திறமை கொண்டவர்.
மிரட்டும் தென்னாப்பிரிக்கா:
தென்னாப்பிரிக்க அணியும் பேட்டிங்கிற்கு சளைத்தது அல்ல. கவுகாத்தியில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை துவைத்து எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். அந்த அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் மிகப்பெரிய பலமாக உள்ளார். அவர் அரையிறுதியில் 169 ரன்களை விளாசினார். அவர் இன்றைய போட்டியிலும் அதிரடி காட்ட ஆர்வம் காட்டுவார். மற்றொரு தொடக்க வீராங்கனை டஸ்மின்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்.
அரையிறுதியில் சொதப்பிய அன்னேகே போஸ்ச், சுனே லூயிஸ், சினோலோ, அன்னெரே இன்று சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம். மிடில் ஆர்டரில் மாரிஜேன் காப், க்ளோ ட்ரையோன் பக்கபலமாக உள்ளனர். இந்த அணியை இந்திய அணி தனது பந்துவீச்சால் விரைவில் வீழ்த்த வேண்டியது அவசியம்.
பந்துவீச்சு எப்படி?
இரு அணியிலும் பேட்டிங் பலமாக இருக்கும் சூழலில் வெற்றியைத் தீர்மானிக்கும் முடிவு பந்துவீச்சில்தான் உள்ளது. கடந்த இரு அரையிறுதியிலும் இரு அணிகளும் 300க்கும் மேல் ரன்களை குவித்த நிலையில், இந்திய அணியைக் காட்டிலும் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் திறம்பட அரையிறுதியில் வீசியுள்ளது.

அந்த அணியில் மாரிஜான் காப் அரையிறுதியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் ஆபத்தான பந்துவீச்சாளராக உள்ளார், அயபோங்கா காகா, கிளெர்க், எம்லாபா, சுனே லூயிஸ், கிளோ ட்ரையோன் ஆகியோர் அந்த அணிக்கு பந்துவீச்சு பலமாக உள்ளனர். அவர்களை இந்திய அணி திறம்பட எதிர்கொண்டால் வெற்றி இந்திய அணிக்கு வசமாகும்.
இந்திய அணிக்கு பந்துவீச்சு பலமாக ரேணுகா, ஸ்ரீ உள்ளனர். கடந்த அரையிறுதியில் ரன்களை வாரி வழங்கிய கிரந்தி, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், ராதா இந்த இறுதிப்போட்டியில் கட்டுப்பாட்டுடன் பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
சொந்த மண் தரும் உற்சாகம்:
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் சொந்த மண்ணில் ஆடுவது மிகப்பெரிய பலமாக உள்ளது. மேலும், அரையிறுதி நடந்த அதே மைதானத்தில் இந்திய அணி ஆடுவதால் அவர்களுக்கு இது கூடுதல் பலமாக உள்ளது. அதேசமயம், இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்க அணி இன்றும் சிறப்பாக ஆட ஆர்வம் காட்டுவார்கள். இந்திய மகளிர் அணி இந்த போட்டியை வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. மழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே கூறப்படுகிறது. ஓடிடியில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.




















