IND vs AUS T20, CWG 2022: காமன்வெல்த் 2022: இறுதிவரை போராட்டம்.. வெள்ளியுடன் நாடு திரும்பிய இந்திய மகளிர் அணி...!
கடந்த சில மாதங்களில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை போன்ற தொடர்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக காமன் வெல்த் விளையாட்டில் ஹாக்கி, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜிம்நாஸ்டிக்ஸ் உள்ளிட்ட பிற விளையாட்டு போட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால் இப்போது, காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில் முதன் முறையாக பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டது.
இந்திய களமிறங்கிய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தாலும், அதன்பிறகு பாகிஸ்தான், பார்படாஸ், இங்கிலாந்து அணிகளை எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, நேற்று காமன்வெல்த் இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்திருந்தார். இந்தியா சார்பில் ரேணுகா சிங் மற்றும் சினே ராணா தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் தங்க பதக்கத்தை வென்றுவிடலாம் என்ற அடிப்படையில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக ஷாபாலி வர்மா, ஸ்மிருதி மந்தானா களமிறங்கினர். இந்த தொடரின் அதிரடி தொடக்க ஜோடியாக பார்க்கப்பட்ட இந்த ஜோடி 16 ரன்களுக்குள் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ஸ்மிருதி மந்தானா 6 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஷாபாலி வர்மா 11 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி ஆஸ்திரேலியா அணிக்கு பயம் காட்ட தொடங்கியது. இந்த ஜோடி மட்டும் 98 ரன்கள் அமைத்து சிறப்பான பார்டனர்ஷிப் அமைத்தது. சிறப்பாக ஆடி கொண்டிருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 பந்துகளில் 33 ரன்கள் அடித்து நடையைக்கட்ட, அதன் பின்னர் வந்த பூஜா வஸ்த்ரகர் 1 ரன்களில் ஏமாற்றம் அளித்தார்.
A tight finish in the end and Australia beat India by 9 runs in the final of the Commonwealth Games.#TeamIndia get the SILVER medal 🥈 pic.twitter.com/s7VezmPhLI
— BCCI Women (@BCCIWomen) August 7, 2022
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 43 பந்துகளில் 65 ரன்கள் அடித்து வெளியேற, இந்தியாவின் வெற்றி காற்று மெல்ல ஆஸ்திரேலியா பக்கம் வீச தொடங்கியது. தொடர்ச்சியாக இந்தியவின் விக்கெட்கள் சரிய, 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்குள் சுருண்டது.
கடைசி 5 இந்திய விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா 13 ரன்களுக்குள் வீழ்த்தியது. ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே கார்ட்னர் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காமன்வெல்த் தொடரில் முதல் தங்கத்தை வென்றது. கடந்த சில மாதங்களில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை போன்ற தொடர்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் விளையாட்டு 2022 கிரிக்கெட் பதக்கம் வென்றவர்கள்:
தங்கம்: ஆஸ்திரேலியா பெண்கள்
வெள்ளி: இந்திய பெண்கள்
வெண்கலம்: நியூசிலாந்து பெண்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்