IND vs WI 3rd T20: வாழ்வா? சாவா? ஆட்டம்.. இந்தியாவுக்கு டார்கெட் 160; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்துமா இளம் படை?
IND Vs WI, Innings Highlights: வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் சேர்த்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள புரொவிடன்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் மிகவும் நிதானமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பவர்ப்ளேவில் தடுமாற்றத்துடனே விளையாடியது. இதனால் பவர்ப்ளேவில் விக்கெட் எதையும் இழக்காமல் 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி கொஞ்சம் கியரை அதிரடிக்கு மாற்ற, அதனால் இந்திய அணிக்கு விக்கெட்டுகள் ஈஸியாக கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டை 55 ரன்களில் இருந்தபோது இழந்தது. இந்தபோட்டியின் முதல் விக்கெட்டாக அக்ஷ்ர் படேல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெயில் மேயர்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் இந்திய அணியின் குல்தீப் யாதவ் அடுத்த மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக போட்டியின் 15வது ஓவரின் முதல் பந்தில் நிக்கோலஸ் பூரனும் ஐந்தாவது பந்தில் பிரண்டன் கிங்கும் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி குல்தீப் பந்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், மற்ற பந்து வீச்சாளர்களை டார்கெட் செய்து ரன்களை சேகரித்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பாவல் 40 ரன்களும், பிரண்டன் கிங் 42 ரன்களும் அதிகபட்சமாக அடித்திருந்தனர்.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்:
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியைச் சந்தித்தது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது.
3வது டி-20 போட்டி:
இந்நிலையில் தான் 3வது டி-20 போட்டி, புரொவிடன்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடிக்க இளம் இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால், 2016ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக அந்த அணி வெல்லும் முதல் தொடராக இது இருக்கும்.