IND vs SA T20: நடப்பாண்டில் வெற்றி மேல் வெற்றி..! டி20 உலககோப்பையை வெல்லுமா இந்தியா..?
இந்திய கிரிக்கெட் அணி நடப்பாண்டில் இதுவரை நடைபெற்றுள்ள 8 டி20 தொடர்களில் 7 தொடர்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் இந்திய அணி 237 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 221 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் முறையாக இந்திய அணி டி20 தொடரை வென்றுள்ளது. சமீப காலங்களாக இந்திய அணி டி20 தொடர்களில் அசத்தி வருகிறது. இந்தச் சூழலில் இந்தாண்டு இதுவரை நடைபெற்றுள்ள டி20 தொடர்களில் இந்திய அணியின் வெற்றிகள் என்னென்ன?
வெஸ்ட் இண்டீஸ் தொடர் (3-0):
சொந்த மண்ணில் இந்திய அணி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடரில் 3 போட்டிகளையும் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியது.
இலங்கை தொடர்(3-0):
இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்றது. அதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர்ந்து இலங்கை அணியையும் இந்தியா ஒயிட்வாஷ் செய்தது.
தென்னாப்பிரிக்கா (2-2):
இந்தாண்டு ஜூன் மாதம் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. அதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தன. 5வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்காரணமாக இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
அயர்லாந்து (2-0):
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடரில் 2 போட்டிகளிலும் இந்திய அணி அசத்தியது. ஹர்திக் பாண்ட்யா அசத்தலாக விளையாடினார்.
இங்கிலாந்து (2-1):
அயர்லாந்து தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ் அசத்தலாக விளையாடிய தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் (4-1):
இங்கிலாந்து தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அந்த நாட்டில் களமிறங்கியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.
ஆஸ்திரேலியா (2-1):
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. அத்துடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
தென்னாப்பிரிக்கா (2*-1):
ஆஸ்திரேலிய தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இவ்வாறு இந்தாண்டு நடைபெற்ற 8 டி20 தொடர்களில் இந்திய அணி 7 தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்த ஃபார்ம் உடன் அடுத்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லுமா என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.