Sanju Samson : "நேற்று ஹீரோ, இன்று ஜீரோ" சஞ்சு சாம்சன் பெயரில் இப்படி ஒரு சாதனையா!
Sanju Samson Ind vs SA - இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய வீரரும் டி20 போட்டிகளில் ஓரே ஆண்டில் 4 முறை டக் ஆவுட் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டக் அவுட் ஆனது மூலம் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் இந்திய டி20 அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன்
டக் அவுட் ஆன சஞ்சு:
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி கேபெர்ஹவில் உள்ள ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் மூன்று பந்துகளை மட்டும் சந்தித்து, யான்சன் பந்தில் டாக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 4 முறை டாக் அவுட்டான பேட்ஸ்மேன் எனற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சஞ்சு சாம்சன்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி அங்கு நான்கு டி20க்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டர்பனில் நடந்தது. அந்த போட்டியில் சஞ்சு சாம்சனின் அபார சதத்தால் இந்திய அணி முதல் போட்டியை 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலும் சதம் அடித்த சாம்சன் இரண்டாவது டி20 போட்டியிலும் சதம் அடித்தால் சர்வதேச டி20களில் ஹாட்ரிக் சதம் அடித்த முதல் வீரர் என்று சாதனையை படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், நேற்றைய போட்டியில் வெறும் மூன்று பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிராக ஹைதரபாத்தில் நடந்த டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் சதம் அடித்திருந்தார்.
ரோகித் சாதனை முறியடிப்பு:
நேற்றைய போட்டியில் சாம்சன் டக் அவுட் ஆகியதால் இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டன் ரோகித்தின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டில் 3 முறை ரோகித் சர்மா டக் அவுட்டாகி இருந்தார். அந்த சாதனையை தற்போது சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய வீரரும் டி20 போட்டிகளில் ஓரே ஆண்டில் 4 முறை டக் ஆவுட் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து இரண்டு சதங்கள் மற்றும் நான்கு முறை அவுட் என்ற விநோத சாதனையும் சாம்சன் பெயரில் இடம்பெற்றுள்ளது.
இந்திய அணி தோல்வி
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 45 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கோட்சியாவின் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கான மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நாளை மறுதினம் நடைப்பெற உள்ளது.