IND vs PAK T20 Worldcup: ராகுல், ரோகித், சூர்யகுமார் யாதவ் அவுட்..! அடுத்தடுத்து விக்கெட்டுகள்..! இந்திய ரசிகர்கள் கவலை..
பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் கே.எல்.ராகுல், ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
160 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணி 4 ஓவர்களில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் 4 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். நசீம் ஷா பந்துவீச்சில் ராகுல் போல்டு ஆனார். ஹரிஸ் ரெளப் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்ற இஃப்திகாரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்க கேப்டன் ரோகித் சர்மா.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கியது.
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கடும் எதிர்பார்ப்புக்கிடையில் இந்த போட்டிகள் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
வெற்றியை வெடி வெடித்துக் கொண்டாட பாகிஸ்தான் ரசிகர்களும் இந்திய ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கும் இந்த போட்டி நடைபெற இயற்கையும் ஒத்துழைத்து வருகிறது. நேற்றுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி 90% மழையால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது, மழை பெய்ய குறைவான வாய்ப்பே உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் கூறியுள்ள செய்தி பலரை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தது.
முன்னதாக, மெல்போர்னில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆஸாம் களமிறங்கினர். முதல் ஓவரில் 1 ரன்னை மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.
அர்ஷ்தீப் சிங் இரண்டாவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் பாபர் ஆஸாம் எல்பிடபிள்யூ ஆகி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார்.
இதையடுத்து, ஷான் மசூத் களம் புகுந்தார். 4வது ஓவரை மீண்டும் அர்ஷ்தீப் சிங் வீச அந்த ஓவரின் கடைசி பந்தில் புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான். அப்போது அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இதையடுத்து, இஃப்திகார் அகமதுவும், ஷான் மசூதும் நின்று விளையாடினார். இருவரின் கூட்டணியை உடைக்க இந்திய வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தனர்.
அதிர்ஷ்டவசமாக தப்பிய மசூத்
முகமது ஷமி வீசிய 8ஆவது ஓவரின் 3வது பந்தை ஷான் மசூத் தூக்கி அடித்தார். அஸ்வின் பாய்ந்து கேட்ச் பிடித்தார். எனினும், நூலிழையில் விக்கெட் வாய்ப்பு பறிபோனது. அனைவரும் விக்கெட் என்று கருதிய நிலையில், ரீப்ளேயில் பார்த்தபோது பந்து தரையில் பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூன்றாவது நடுவர் நாட் அவுட் கொடுத்தார்.
10 ஓவர்கள் முடிவில் 60 ரன்கள்
பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திர அஸ்வின் வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார் பாகிஸ்தான் வீரர் இஃப்திகர் அகமது. சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் வீசிய 12ஆவது ஓவரில் 3 சிஸ்கர்களை விளாசினார். அரை சதமும் பதிவு செய்தார். அடுத்த ஓவரை முகமது ஷமி வீச எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் இஃப்திகார்.
ஷான் மசூத் அரை சதம்
அப்போது அணி 12.2 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, ஷதாப் கான், ஹைதர் அலி, முகமது நவாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்து வைடாக வீசினார். கடைசி ஓவரின் 2வது பந்தில் ஷஹீன் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்து சிக்ஸருக்கு பறக்க, கடைசி பந்தில் 2 ரன்கள் ஓடினர். இவ்வாறாக பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடவுள்ளது.