IND vs PAK, T20 : புவனேஷ், ஹர்திக் அபார பந்துவீச்சு..! இந்தியாவிற்கு 148 ரன்கள் இலக்கு..! எளிதில் வெல்லுமா இந்தியா..?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. புவனேஷ் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக்பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஆசிய கோப்பைத் தொடரில் இன்று துபாயில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. பேட்டிங்கைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலே புவனேஷ் பந்தில் முகமது ரிஸ்வானுக்கு எல்.பி.டபுள்யூ வழங்கப்பட்டது. ஆனால், ரிவியூ மூலம் அது நாட் அவுட் என்று தெரியவந்ததால் ரிஸ்வானுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
இந்திய அணியின் புவனேஷ்குமாரும், அர்ஷ்தீப்சிங்கும் கடும் நெருக்கடி அளித்தனர். மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனான பாபர் அசாம் 10 ரன்களில் புவனேஷ்குமார் பந்தில் அர்ஷ்தீப்சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து, களமிறங்கிய பக்கர் ஜமான் முதல் பந்திலே பவுண்டரி விளாசினார். 3 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது.
முகமது ரிஸ்வான் தடுமாறினாலும் பக்கர் ஜமான் அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆவேஷ்கான் வீசிய பவர்ப்ளேவின் கடைசி ஓவரான 6வது ஓவரில் முகமது ரிஸ்வான் சிக்ஸர், பவுண்டரி விளாசினாலும் அதே ஓவரில் பக்கர் ஜமான் 6 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 10 ரன்களில் அவுட்டானார். பவர்ப்ளே முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ரிஸ்வானும், இப்திகார் அகமதுவும் அதிரடி காட்ட முயற்சித்தனர். இப்திகார் அகமது அதிரடியாக ஆடினார். 22 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானர். மறுமுனையில் முகமது ரிஸ்வான் களத்தில் நின்றாலும் அவர் அதிரடி காட்டாததால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி 14 ஓவர்களில் 96 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாபர் அசாம் அதிரடியாக ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஆனால், ஹர்திக் பாண்ட்யா பந்தில் தொடக்க வீரர் ரிஸ்வான் 42 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் பாகிஸ்தானின் குஷ்தில் ஷா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 14.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
கடைசி 5 ஓவர்களில் பாகிஸ்தான் அதிரடி காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அதிரடி காட்ட முயற்சித்த பாகிஸ்தான் அணியின் ஆசிப் அலி புவனேஷ்குமார் பந்தில் 9 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் புவனேஷ்குமாரும், அர்ஷ்தீப் சிங்கும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அர்ஷ்தீப்சிங் வீசிய 18வது ஓவரில் முகமது நவாஸ் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். புவனேஷ்குமார் தொடர்ந்து லைன் மற்றும் லென்த்தில் வீசியதால் பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் தடுமாறினார்.
அவரது கடைசி ஓவரில் அதிரடி காட்ட முயற்சித்த ஷதாப்கானை 10 ரன்களில் அவுட்டாக்கினார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே அறிமுக வீரர் நசீம்ஷா டக் அவுட்டாகினார். கடைசி கட்டத்தில் தஹானி அதிரடி காட்டியதால் பாகிஸ்தான் ரன் எகிறியது. இறுதியில் அவரை அர்ஷ்தீப்சிங் போல்டாக்கினார். இதனால், பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 147 ரன்களை எட்டியது. தஹானி கடைசியில் 6 பந்தில் 2 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் புவனேஷ்குமார் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீசினார்.