Ind Vs Pak: கைகுலுக்காத இந்தியா.. எங்க ஊர் பக்கமே வரக்கூடாது - நடுவர் மீது ஐசிசியில் எகிறும் பாகிஸ்தான்..
Asia Cup Ind Vs Pak: ஐசிசி தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து உடனடியாக விலகுவோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டியுள்ளது.

Asia Cup Ind Vs Pak: இந்திய அணி உடனான போட்டியின் நடுவராக செயல்பட்ட ஆண்டி பைக்ராஃப்டை உடனடியாக நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தான் மிரட்டல்:
ஆசியக் கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதேநேரம், போட்டிகளின் முடிவில் வழக்கமாக பின்பற்றப்படும் கைலுக்கும் மரபை, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வீரர்கள் தவிர்த்தனர். இது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், அந்த போட்டிக்கான நடுவராக செயல்பட்ட ஆண்டி பைக்ராஃப்டை உடனடியாக நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. தவறும்பட்சத்தில் நடப்பு ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறுவோம் என்றும் எச்சரித்துள்ளது.
போட்டி நடுவர் மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இதுதொடர்பான கடிதத்தை இந்திய அணிக்கு எதிரான போட்டி முடிந்த உடனேயே, இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா தலைமை பதவி வைக்கும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளத்திற்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ளது. அதில், டாஸ் போடுவதற்கு முன்பு பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று, டாஸ் முடிந்ததும் கைகுலுக்கல்கள் இருக்காது என்று அறிவுறுத்தியதாக பிசிபி குற்றம் சாட்டியது. பைக்ராஃப்ட் கிரிக்கெட்டின் உணர்வையும் எம்.சி.சி சட்டங்களையும் தெளிவாக மீறியுள்ளார், எனவே அவர் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டார் என பைக்ராஃப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளது.
தென்னாப்ரிக்கா தொடரிலிருந்தும் நீக்க கோரிக்கை:
குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்ரிக்கா தொடரிலும் அவர் நடுவராக செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 12ம் தேதி தொடங்க உள்ள இந்த தொடரில் ஐந்து ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஆகியவை அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆசியக்கோப்பை போட்டியிலேயே மீண்டும் இந்தியாவை எதிர்கொள்ள வாய்ப்புள்ள சூழலில், ”தற்போது ஐசிசியின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், விளையாட்டின் உணர்வு மற்றும் எம்சிசி சட்டங்களை மதித்து எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா சொல்வது என்ன?
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளால் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதல் காரணமாகவே, அந்நாட்டு வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவத்திற்கு விதிகளை மதிக்காத போட்டியின் நடுவரான ஜிம்பாப்வேயின் முன்னாள் வீரரான 69 வயதான பைக்ராஃப்ட் தான் காரணம் என பாகிஸ்தான் தற்போது குற்றம்சாட்டியுள்ளது. அந்நாட்டின் புகார்களுக்கு மத்தியிலும்,
நேற்று நடைபெற்ற ஹாங்காங் மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் நடுவராக செயல்பட பைக்ராஃப்டிற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொறுப்பு வழங்கியது. இந்த அமைப்பின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி இருப்பது குறிப்பிடத்தக்கது.




















