Mark Chapman Records : இந்தியாவிற்கு எதிராக வரலாற்றுச் சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் - என்ன சாதனை தெரியுமா?
இந்தியாவிற்கு எதிராக நேற்று அரைசதம் அடித்த சாப்மன் நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் நாட்டு அணிகளுக்காக தனது முதல் டி20 போட்டியிலே அரைசதம் அடித்த வீரர் என்ற அரிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேரில் மிட்செல் புவனேஷ்குமாரின் முதல் பந்திலே போல்டாகி வெளியேறினார். இதையடுத்து, களமிறங்கிய சாப்மன் தொடக்க வீரர் மார்டின் கப்திலுடன் இணைந்து அபாரமாக ஆடினர். அவர் 50 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 63 ரன்கள் குவித்தார்.
இந்த சாப்மன் மிகவும் சுவாரஸ்யமான பின்னணியை கொண்டவர். நியூசிலாந்து அணிக்காக களமிறங்கிய சாப்மன், ஹாங்காங் நாட்டில் பிறந்தவர். தனது கிரிக்கெட் வாழ்க்கையை அவர் ஹாங்காங் நாட்டிற்காக ஆடத்தொடங்கினர். 2014ம் ஆண்டு முதல் அவர் ஹாங்காங் நாட்டிற்காக கிரிக்கெட் ஆடினார். பின்னர், தனது 15வது வயதிலே ஹாங்காங் நாட்டிற்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஆடினார். 2015ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை அவர் அடித்தார்.
சாப்மனின் தந்தை நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவர் மூலமாக நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்த சாப்மன் தொடக்கத்தில் ஆக்லாந்து அணிக்காக ஆடினார். அவரது சிறப்பான ஆட்டத்தால் அவர் கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றார். அதற்கு முன்பாக, 2017-2018ம் ஆண்டு சூப்பர் ஸ்மாஷ் போட்டியில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்ததும், பிற லீக் போட்டிகளில் அதிரடியாக ஆடியதும் அவரை அணியில் தேர்வு செய்யவைத்தது.
சாப்மன் படைத்த புதிய சாதனை என்னவென்றால், 2014ம் ஆண்டு ஹாங்காங் அணிக்காக முதன்முதலாக டி20 சர்வதேச போட்டியில் சாப்மன் அறிமுகமானார். ஓமனுக்கு எதிராக அறிமுகமான முதல்போட்டியில் 63 ரன்களை குவித்து அசத்தினார். பின்னர், ஹாங்காங்கில் இருந்து நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்த சாப்மன் நியூசிலாந்து அணிக்காக தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் நேற்றுதான் அறிமுகமானார். இந்தியாவிற்கு எதிராக களமிறங்கிய சாப்மன் நேற்றும் 63 ரன்களை குவித்து அசத்தினார்.
இதன்மூலம், இரு நாடுகளுக்காக டி20 போட்டிகளில் ஆடி, இரு நாடுகளுக்காகவும் தான் ஆடிய முதல் டி20 போட்டியிலே அரைசதம் அடித்த வீரர் என்ற அரிய சாதனையை மார்க் சாப்மன் படைத்துள்ளார். சாப்மன் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் ஆடி 161 ரன்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 124 ரன்களை எடுத்துள்ளார். 31 டி20 போட்டிகளில் ஆடி 598 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்