IND Vs ENG Test: 3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 3 சதங்கள் இருந்தும் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்-கின் அபார பந்து வீச்சால், கடைசி 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
இந்த போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இந்திய அணியில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் சிறப்பான சதம் மற்றும் துணை கேப்டன் கேப்டன் ரிஷப் பண்ட்டின் அரைசதத்துடன் இந்திய அணி நேற்றைய முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாளில் சறுக்கிய இந்திய அணி
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்த நிலையில், சதத்துடன் சிறப்பாக ஆடிவந்த கேப்டன் சுப்மன் தொடர்ந்து அதே வேகத்தில் ஆடிய நிலையில், 147 ரன்கள் எடுத்திருந்தபோது பஷிரின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய துணை கேப்டன் ரிஷப் பண்ட், தனது 7-வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தி, ஏற்கனவே சாதனையாக இருந்த முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் 6 சதங்களை கடந்து புதிய சாதனையை படைத்தார்.
இதனிடையே, கில்லிற்கு பிறகு வந்த கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமலேயே, வந்த வேகத்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கிய நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ரிஷப் பண்ட், 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த ஷர்துல் தாகூரும் ஒரே ரன்னை மட்டும் எடுத்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக வந்த பும்ராவும் முட்டையுடன் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் ஆடிவந்த ஜடேஜா 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த பிரசித் கிருஷ்ணாவும் ஒரே ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜ் மட்டும் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
41 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து சொதப்பிய இந்திய அணி
ஒரு கட்டத்தில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 430 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது இந்திய அணி. அதன் பின்னர், இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சு சூடுபிடிக்க, அடுத்த 41 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
இங்கிலாந்து தரப்பில், அபாரமாக பந்துவீசிய பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங், தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் இந்திய அணி சொதப்பியது என எடுத்துக்கொண்டாலும், கடைசி நேரத்தில் ஆடுகளம் பவுலர்களுக்கு சாதமாக மாறியதால், இந்திய அணியின் பவுலர்களுக்கு அது உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் கடைசி விக்கெட் விழுந்தபோது மழை தொடங்கியதால், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.




















