(Source: ECI/ABP News/ABP Majha)
James Anderson: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? அப்டினா..! ஜேம்ஸ் ஆண்டர்சன் பதிலால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி
James Anderson: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனின் பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
James Anderson: இந்தியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், அணியின் இளம் வீரர்களுக்கு உதவ இருப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பேசியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து, முதல் இரண்டு போட்டிகளுக்காக ரோகித் சர்மா தலைமையில், 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம், இந்த தொடரில், வேகப்பந்துவீச்சை விட, சுழற்பந்துவீச்சு அதிக தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான், இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்தியா உடனான தொடர் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
”இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள்”
தனியார் நாளிதழிற்கு அளித்த பேட்டியில், “ இந்தியா உடனான தொடருக்கான இங்கிலாந்து அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே எங்கள் தரப்பில் அதிகளவில் வேகப்பந்துவீச்சு தாக்குதல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது சற்று வித்தியாசமான சூழல் தான். ரிவர்ஸ் ஸ்விங் முக்கிய வகிக்கும் என கருதுகிறேன். இந்த தொடரில் நாங்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு கூட களமிறங்கலாம்.
ஓய்வு பெறுகிறேனா?
இப்போதெல்லாம் என்னைப் பார்ப்பவர்கள் விரைவில் ஓய்வு பெறபோகிறேன் என கருதி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அவர்களிடம் நான் ஸ்டூவர்ட் பிராட் கிடையாது என்று விளக்கம் கொடுத்து வருகிறேன். வேடிக்கயாக இருந்தாலுமே, ஓய்வு பெறும் எண்ணம் என்னுடைய மனதில் இப்போதில்லை. ஏனெனில், கடந்த 20 ஆண்டுகளை போல இப்போதும் என்னால் அணிக்காக பங்காற்ற முடியும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் இங்கிலாந்துக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் திறமையை கொண்டிருப்பதாக நம்புகிறேன். இதற்கு முன் இந்திய மண்ணில் விளையாடாத பந்துவீச்சாளர்கள் இம்முறை அணியில் உள்ளனர். எனவே இந்தியாவில் உள்ள பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் சவால்களைப் பற்றிய தகவல்களை அவர்களுக்கு கொடுப்பது என்னுடைய கடமையாகும்" என தெரிவித்துள்ளார்.
மீண்டும் அசத்துவாரா ஆண்டர்சன்?
41 வயதான ஆண்டர்சன் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஆஷஷ் தொடரில் அவர் அதிகளவில் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும், இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது. அதோடு, தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர்களான ரேஹன் அஹ்மத், டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷிர் ஆகியோருக்கு இதுவரை இந்திய அணிய விளையாடிய அனுபவமே கிடையாது. அவர்களுக்கு ஆண்டர்சனின் அனுபவம் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி:
தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவர் 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டிலும் தொடங்குகிறது. நான்காவது போட்டி பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியிலும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவிலும் தொடங்குகிறது. கடந்த 2012-13ம் ஆண்டு நடைபெற்ற தொடருக்கு பிறகு, இங்கிலாந்து அணி ஒருமுறை கூட இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கூட, இந்திய அணி 3-1 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.