IND vs ENG: இந்திய அணிக்காக காத்திருந்த தினேஷ் கார்த்திக்.. முக்கிய பொறுப்பை கொடுத்து தூக்கிய இங்கிலாந்து அணி..!
‘இந்தியா ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.
நீண்ட நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவது, வெளியேறுவதுமாக இருந்த தினேஷ் கார்த்திக் தற்போது ஒரு முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது, ‘இந்தியா ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் வருகின்ற ஜனவரி 18ம் தேதி வரை அதாவது வெறும் 9 நாட்கள் மட்டுமே பயிற்சியாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
9 நாட்கள் மட்டும் ஏன்..?
முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயன் பெல் கார்த்திக்கிற்கு பதிலாக ஜனவரி 19ம் தேதியில் இருந்து பேட்டிங் ஆலோசகராக செயல்படுவார் என்றும், முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கிரேம் ஸ்வான் முழு சுற்றுப்பயணத்திற்கும் வழிகாட்டியாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து அணியில் பெல் மற்றும் ஸ்வான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர். இந்த தொடரில் இந்திய அணி 2-1 என வெற்றிபெற்றாலும், இங்கிலாந்து அணிக்காக அந்த தொடரில் ஆஃப் ஸ்பின்னர் ஸ்வான் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், பேட்ஸ்மேன் பெல் சதம் அடித்தார்.
இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்:
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே ஜனவரி 12 முதல் பிப்ரவரி 4 வரை நான்கு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்துடன் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. அதற்கு பின் ஜனவரி 17 முதல் அகமதாபாத்தில் மூன்று நான்கு நாள் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் இங்கிலாந்து அணியின் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு இணையாக இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் போட்டி அட்டவணை:
12-13 ஜனவரி | இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் (இரண்டு நாள் பயிற்சி ஆட்டம்) |
17-20 ஜனவரி | இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் (நான்கு நாள் ஆட்டம்) |
24-27 ஜனவரி | இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் (நான்கு நாள் ஆட்டம்) |
1-4 பிப்ரவரி | இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் (நான்கு நாள் ஆட்டம்) |
தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை:
தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தினேஷ் கார்த்திக் 2022 உலக கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக தனது கடைசி டி20 சர்வதேச போட்டியில் விளையாடினார். 2004 இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர், தனது ஓய்வை இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால், ஒரு வர்ணனையாளராக டிவியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சர்வதேச வட்டாரத்தில் இதுபோன்ற பயிற்சியாளராக இருப்பது இதுவே அவருக்கு முதல் அனுபவம்.
இந்தியா ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ரஜத் படிதார், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், பிரதோஷ் ரஞ்சன் பால், கே.எல். பாரத் (விக்கெட் கீப்பர்), புல்கித் நரங், மானவ் சுதர், நவ்தீப் சைனி, துஷார் தேஷ்பாண்டே, வித்வத் கவேரப்பா மற்றும் ஆகாஷ் டீப் இங்கிலாந்து லயன்ஸ்
இங்கிலாந்து லயன்ஸ் அணி: ஜோஷ் போஹானன் ( லங்காஷயர், கேப்டன்.), கேசி ஆல்ட்ரிட்ஜ் (சோமர்செட்), பிரைடன் கார்ஸ் (டர்ஹாம்), ஜாக் கார்சன் (சசெக்ஸ்), ஜேம்ஸ் கோல்ஸ் (சசெக்ஸ்), மாட் ஃபிஷர் (யார்க்ஷயர்), கீட்டன் ஜென்னிங்ஸ் (லங்காஷயர்), டாம் லாஸ் (சர்ரே), அலெக்ஸ் லீஸ் (டர்ஹாம்), டான் மௌஸ்லி (வார்விக்ஷயர்), கால்லம் பார்கின்சன் (டர்ஹாம்), மாட் பாட்ஸ் (டர்ஹாம்), ஒல்லி பிரைஸ் (க்ளௌசெஸ்டர்ஷைர்), ஜேம்ஸ் ரீவ் (சாமர்செட்), ஒல்லி ராபின்சன் (டர்ஹாம்).