KS Bharat: ஜொலிக்கும் ஜோயல்! கம்பேக் தரும் ரிஷப்! இனி பரத் கதி அதோகதிதானா?
இந்திய கிரிக்கெட் அணியின் கே.எஸ்.பரத் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இனி வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்திய அணி இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த தொடரை பொறுத்தவரை இந்திய அணி தன்னுடைய முழு பலத்துடன் களமிறங்கவில்லை என்பதே உண்மை ஆகும்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:
சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்பதை தவிர இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணி பலவீனமாகவே இருந்தது. குறிப்பாக, பேட்டிங்கில் இந்திய அணி இங்கிலாந்துடன் ஒப்பிடும்போது மிகவும் பலவீனமாக இருந்தது. விராட் கோலி மொத்த தொடரில் இருந்தும் விலக, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இடம்பெறவில்லை.
இதனால், இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், படிதார், பரத், சர்பராஸ் கான், துருவ் ஜோயல் ஆகியோருக்கு தங்களை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. இதில் ரிஷப்பண்ட் விபத்தில் சிக்கிய பிறகு இந்திய அணி ஆடும் டெஸ்ட் போட்டிகளில் எல்லாம் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த பரத்திற்கு முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஜொலித்த ஜோயல்:
ஆனால், அவர் இதுவரை இந்திய அணியில் வழங்கப்பட்ட அனைத்து வாய்ப்பையும் வீணடித்தார். குறிப்பாக, இந்த தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டியில் வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தாதால் அவர் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் உட்கார வைக்கப்பட்டார். அவருக்கு பதில் இளம் வீரர் துருவ் ஜோயலுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
துருவ் ஜோயல் முதல் டெஸ்டிலே தன்னை நிரூபித்த நிலையில், ராஞ்சி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். குறிப்பாக, முதல் இன்னிங்சில் 90 ரன்களை விளாசி அசத்தியதுடன், இரண்டாவது இன்னிங்சில் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி காலையிலே ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, படிதார். ஜடேஜா, சர்பராஸ் கான் என விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தத்தளித்தபோது சுப்மன் கில்லுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஹிப் அமைத்தார்.
சொதப்பும் பரத்:
120 ரன்களில் சுப்மன் கில்லுடன் சேர்ந்த துருவ் ஜோயல் இலக்கை அடையும் வரை சிறப்பாக ஆடினார். இறுதியில் இந்திய அணி 192 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் கில்லுக்கு ஒத்துழைப்பு தந்த துருவ் ஜோயல் 77 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
23 வயதே ஆன துருவ் ஜோயல் 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடி 1 அரைசதத்துடன் 175 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங்கில் நெருக்கடியான நேரத்தில் அணிக்கு உதவுவதுடன், கீப்பிங்கிலும் அசத்துகிறார். ஆனால், 30 வயதான பரத் 7 டெஸ்ட் போட்டிகளில் 12 இன்னிங்சில் ஆடி வெறும் 221 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்துள்ளார்.
பரத்திற்கு இனி நோ சான்ஸ்:
ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து குணம் அடைந்து வரும் சூழலில், விரைவில் அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்று கருதப்படுகிறது. துருவ் ஜோயலுக்கு எதிர்காலத்தில் கீப்பராக இல்லாவிட்டாலும் பேட்ஸ்மேனாக வாய்ப்பு தொடரும் என்று கருதப்படுகிறது. ஆனால், பரத்திற்கு விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் என எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்றே கருதப்படுகிறது.
வாய்பபு வழங்கப்பட்ட இளம் வீரர்களில் ஜெய்ஸ்வால், சுப்மன்கில், துருவ் ஜோயல், சர்பராஸ் கான் சிறப்பாக ஆடினர். ஆனால், படிதார் மற்றும் பரத் மிகவும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். பரத்திற்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டதாக கருதப்படுவதால் எதிர்காலத்தில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுவது கடினம் என்றே சொல்லலாம்.