IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றி பெறப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி நாள் ஆட்டம் நாளை விறுவிறுப்பாக நடக்க உள்ளது.
இந்திய- வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
நாளை கடைசி நாள் ஆட்டம்:
இந்த ஆட்டத்தில் இரண்டு நாட்களை மழை முழுவதும் ஆக்கிரமிக்க வங்கதேச அணியை முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாக்கியது. இதையடுத்து, 4வது நாளான இன்று இந்திய அணி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல். விராட் கோலியின் அதிரடியால் 34.4 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணியின் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளான ஜாகிர் ஹாசன், ஹாசன் மக்மூத் ஆகியோரை அஸ்வின் காலி செய்தார். இந்த நிலையில், இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
பேட்டிங் - பவுலிங் மோதல்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் முனைப்புடன் ஆடும் இந்திய அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆடி வருகிறது. இதனால், கடைசி நாளான நாளை இந்திய அணி வங்கதேசத்தின் எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் சொற்ப ரன்களுக்குள் சுருட்ட முனைப்பு காட்டும்.
தற்போது 26 ரன்கள் முன்னிலையுடன் உள்ள வங்கதேச அணியை இந்திய அணி 150 அல்லது 200 ரன்களுக்குள் சுருட்ட இந்திய அணி முனைப்பு காட்டும். இந்திய அணி தனக்கு 200 ரன்களுக்குள் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளவே ஆர்வம் காட்டும். அப்போதுதான் இந்திய அணி மதிய வேளைக்கு பிறகு பேட்டிங் செய்தால் கூட இலக்கை எட்ட முடியும். அதேசமயம், முதல் இன்னிங்சில் சதம் விளாசிய மொமினில், ஷான்டோ, முஷ்பிகிர் ரஹீம், ஷகில் அல் ஹசன், லிட்டன் தாஸ் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், இந்திய அணி இலக்கை நோக்கி அதிரடியாக ஆட முயற்சித்து விக்கெட்டுகளை பறிகொடுத்தால் வங்கதேசத்தின் பக்கம் வெற்றி வாய்ப்பு செல்லும் சூழல் ஏற்படும். இதனால், நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
வெற்றி பெறுமா இந்தியா?
வங்கதேசத்தின் முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் நாளைய நாளிலும் தனது சுழல் தாக்குதலை நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம். அவருக்கு ஜடேஜா, பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோர் பக்கபலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்சில் அதிரடி காட்டிய ரோகித், ஜெய்ஸ்வால், விராட் கோலி இரண்டாவது இன்னிங்சிலும் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். கான்பூரில் நாளை மழை குறுக்கீடு இல்லாமல் இருந்தால் இந்த டெஸ்ட் போட்டிக்கு கண்டிப்பாக முடிவு கிடைக்க வாய்ப்புகள் அதிகளவு இருக்கும்.