Ind vs Aus 1st Test: ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் இன்று...! பல சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் இந்தியா!
கடந்த 2022 பிப்ரவரியில் ரோகித் சர்மா அனைத்து பார்மேட்டிலும் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளும் விளையாடும் டெஸ்ட் தொடர் பார்டர்-கவாஸ்கர் கோப்பை என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த 3 பார்டர்- கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் கேப்டனாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இந்த தொடர் பெரிய சவாலாக இருக்கும்.
கடந்த 2022 பிப்ரவரியில் ரோகித் சர்மா அனைத்து பார்மேட்டிலும் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். எனவே, இந்த தொடரில் ரோகித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், விராட் கோலி 25,000 சர்வதேச ரன்களை எட்ட 64 ரன்கள் தேவையாக உள்ளது. தற்போது, கோலி 24,936 சர்வதேச ரன்களுடன் உலகளவில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். கோலி இந்தியாவுக்காக இதுவரை 490 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 74 சதங்கள் மற்றும் 129 அரை சதங்களை அடித்துள்ளார். மீதமுள்ள 64 ரன்களை கோலி இந்த போட்டியில் அடித்துவிட்டால் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு 25,000 கடந்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார்.
மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 2,000 ரன்களை கடக்க 107 ரன்கள் தேவையாக உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (3630), விவிஎஸ் லக்ஷ்மன் (2434) மற்றும் ராகுல் டிராவிட் (2143) ஆகியோருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனையை நிகழ்த்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார்.
450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்த ஆர் அஷ்வினுக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே தேவை. அஸ்வின் இந்த சாதனையை எட்டினால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார்.
இந்திய அணி:
இந்தியா சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக உள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து வென்று அசத்தி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்ததில்லை.
15வது முறையாக பார்டர் -கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியை சந்திக்கும் ஆஸ்திரேலியா அணி 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடரை வென்றதில்லை.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
இந்த தொடரில் இந்திய அணி குறைந்தது 3 டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். எனவே இந்திய அணி இந்த தொடரில் வெற்றிபெற கடுமையாக போராடும்.
கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
1. ரோஹித் சர்மா (கேப்டன்), 2. ஷுப்மன் கில்/கேஎல் ராகுல், 3. சேட்டேஷ்வர் புஜாரா, 4. விராட் கோலி, 5. ரவீந்திர ஜடேஜா, 6. ஷுப்மான் கில்/சூர்யகுமார் யாதவ், 7. கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), 8. ஆர் அஷ்வின், 9. அக்சர் படேல்/குல்தீப் யாதவ், 10. முகமது ஷமி, 11. முகமது சிராஜ்
கணிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி:
1. டேவிட் வார்னர், 2. உஸ்மான் கவாஜா, 3. மார்னஸ் லாபுசாக்னே, 4. ஸ்டீவன் ஸ்மித், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், 7. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), 8. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 9. ஆஷ்டன் அகர்/டாட் மர்பி, 10. நாதன் லயன், 11. ஸ்காட் போலண்ட்