World Cup 20232: இந்தியாவிற்கு அரையிறுதியில் மும்பையா? கொல்கத்தாவா?.. பாகிஸ்தான்தான் முடிவு செய்யுமாம்?
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியை இந்திய அணி எந்த மைதானத்தில் விளையாடும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியை இந்திய அணி எந்த மைதானத்தில் விளையாடும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை தொடர் அட்டவணை:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி, உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது.
மைதான விவரங்கள்:
48 போட்டிகள் கொண்ட இந்த தொடர் சென்னை, ஐதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 நகரங்களில் நடைபெற உள்ளன. தொடரின் முதல் போட்டியும், இறுதிப்போட்டியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் அரையியிறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15ம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 16ம் தேதியும் நடைபெற உள்ளது.
அரையிறுதிப்போட்டியை இந்தியா எங்கு விளையாடும்?
ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் 9 லீக் போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் முதல் 4 இடங்களுக்குள் இந்திய அணி நுழைந்தால், தனது அரையிறுதிப்போட்டியை மும்பையில் விளையாடவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்ள நேரிட்டால் மட்டும், அந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடருமா இந்தியாவின் வெற்றிப்பயணம்?
உலகக்க்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியே கண்டதில்லை என்ற சாதனை பயணம், கடந்தாண்டு நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரில் முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட 7 முறையும் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. 1992ம் ஆண்டு முதல் இரு அணிகளும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
சச்சின் செய்த சம்பவம்:
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டி என பார்க்கும்போது கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின், அரையிறுதிப்போட்டியில் தான் இந்த இரு அணிகளும் மோதின. அந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர விரரான சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி 85 ரன்கள் குவித்தார். அதன் மூலம் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.