ICC Cricket World Cup 2023: உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த பேட்ஸ்மேன்கள் - டாப் 5 இதோ..!
உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் எட்ட முடியா உயரத்தில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
உலகக்கோப்பை தொடர்:
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்ல தங்களை தயார்படுத்தி வருகின்றன. உள்ளூரில் நடைபெறுவதால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்ற இந்தியா சற்று கூடுதலாகவே தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்திய அணிக்காக இதுவரை உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேன்கள் யார் என்பதை சற்றே திரும்பி பார்க்கலாம்.
01 சச்சின் டெண்டுல்கர்:
கிரிக்கெட் உலகில் பேட்ஸ்மேன்களுக்கான பெரும்பாலான சாதனைகளில் தவிர்க்க முடியாதவறாக இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அந்த வகையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலிலும் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். அதன்படி, 1992ம் ஆண்டு தொடங்கி 2011ம் ஆண்டு வரை 6 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று, 45 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 2 ஆயிரத்து 278 ரன்களை குவித்துள்ளார். 1996 மற்றும் 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களில், அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்ந்தார். இந்திய அணி கோப்பையை வென்ற 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும், 9 போட்டிகளில் விளையாடி 482 ரன்களை குவித்தார். உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சமாக சச்சின் 6 சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
02. விராட் கோலி:
மாடர்ன் கிரிக்கெட்டின் கிங் ஆக போற்றப்படும் விராட் கோலி தான் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2011 தொடங்கி தொடங்கி 3 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள அவர், வெறும் 26 போட்டிகளிலேயே ஆயிரத்து 30 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் அடங்கும்.
03. சவுரவ் கங்குலி
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக மட்டுமின்றி பேட்ஸ்மேன் ஆகவும் கொடிகட்டி பறந்தவர் சவுரவ் கங்குலி. 3 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய அவர் 1006 ரன்களை சேர்த்துள்ளார். குறிப்பாக 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிராக சச்சின் - கங்குலி கூட்டணி 244 ரன்களை சேர்த்ததை எவராலும் மறக்கமுடியாத தருணம் ஆகும். உலகக்கோப்பை தொடரில் அவர் 4 சதங்களை விளாசியுள்ளார். கங்குலி தலைமையில் 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
04. ரோகித் சர்மா
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா தான். 2015 மற்றும் 2019 என இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடிய அவர், 17 இன்னிங்ஸ்களில் 978 ரன்களை சேர்த்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய சச்சினின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். உலகக்கோப்பையில் அதிவேகமாக 6 சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நடப்பு தொடரின் மூலம் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
05. டிராவிட்
இந்திய அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் டிராவிட் தான் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். 5 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய இவர், 860 ரன்களை குவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட மற்ற வீரர்களை போன்று அதிரடியாக ரன் குவிக்காவிட்டாலும், அணிக்காக நிலைத்து நின்று ஆடி பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் டிராவிட்டின் சராசரி 61.43 ஆகும்.