Hardik Pandya MI : மும்பை இந்தியன்ஸ் ரிட்டெய்ன் செய்யாத தருணம்..! ஹர்திக் பாண்ட்யாவின் மனநிலை? ரகசியம் உடைத்த ரவிசாஸ்திரி..!
மும்பை இந்தியன்ஸ் அணி தன்னை ரிடெய்ன் செய்யாதபோது ஹர்திக்பாண்ட்யா அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்ட்யா. ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலமாக வலம் வந்த இவர் கடந்த ஐ.பி.எல். தொடரில் ஏலத்தில் கழட்டிவிடப்பட்டார்.
ஹர்திக் பாண்ட்யாவை அணியில் இருந்து கழட்டி விட்டதற்கு பிறகு அவரது மனநிலை எப்படி இருந்தது என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியின் வர்ணனையின்போது இதுதொடர்பாக பேசிய ரவிசாஸ்திரி, “ மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தக்கவைக்கவில்லை என்று தெரிந்ததும் ஹர்திக் பாண்ட்யா அதிர்ந்துவிட்டார்.” என்றார்.
ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக கலக்கிய ஹர்திக் பாண்ட்யா 2021ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது பார்ம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், கடந்த சீசனில் ரிடெய்ன் வீரர்களாக அளிக்கப்பட்ட 5 பேர் பட்டியலில் கேப்டன் ரோகித், பொல்லார்ட், பும்ரா, இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் இருந்தனர்.
ஆனால், கடைசியில் மூன்று வீரர்கள் மட்டுமே என்ற நிலை வந்தபோது இஷான்கிஷானும், ஹர்திக் பாண்ட்யாவும் கழட்டிவிடப்பட்டனர். ஏலத்தில் 15 கோடி கொடுத்து இஷான்கிஷானை ரிட்டெய்ன் செய்தனர். ஆனால், ஹர்திக் பாண்ட்யாவை தவறவிட்டுவிட்டனர்.
ஹர்திக்பாண்ட்யாவை ஏலத்தில் எடுத்த குஜராத் அவருக்கு கேப்டன் பதவி கொடுத்து அழகு பார்த்தது. தனக்கு வழங்கப்பட்ட பணியை மிகவும் சிறப்பாக செய்த ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி கேப்டன்சியிலும் கலக்கி அறிமுக தொடரிலேயே குஜராத் டைட்டன்சுக்கு கோப்பையை வென்றுத்தந்து வரலாறு படைத்தார்.
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்கினார். இதுவரை 107 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ள ஹர்திக் பாண்ட்யா 1,963 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 8 அரைசதங்கள் அடங்கும். கடந்த சீசன் தவிர மீதமுள்ள அனைத்து சீசனும் அவர் மும்பை அணிக்காக மட்டுமே ஆடியுள்ளார். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தும் ஹர்திக் இதுவரை 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கடந்த சீசனில் குஜராத் அணிக்காக கேப்டனாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 15 போட்டிகளில் ஆடி 487 ரன்களை விளாசினார். அவற்றில் 4 அரைசதங்களும் அடங்கும். 8 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்