Happy Birthday Rohit Sharma: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள்.. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்.. ரோஹித் சர்மாவின் பிறந்தநாள் இன்று!
கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் அயலாந்து அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டின் அறிமுகமான ரோஹித் சர்மா, தனது முதல் சதம் அடிக்க மூன்று வருடம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த 1987ம் ஆண்டு இதே நாளில், ரோஹித் சர்மா நாக்பூரில் பிறந்தார். அவரது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக பல சாதனைகள் படைத்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரோஹித் சர்மா, தனது முதல் சதம் அடிக்க மூன்று வருடம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தது. 2013ம் ஆண்டு சாம்பியன் டிராபியில் ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களமிறங்க எம்.எஸ்.தோனி ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளித்தார். அன்று வாய்ப்பை கெட்டியாக பிடித்துகொண்ட ரோஹித் சர்மா, இன்று இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். இன்று கிரிக்கெட் ரசிகர்கள் ஹிட் மேன் என்று தன்னை செல்லமாக அழைக்கும் அளவிற்கு உயர்த்தி கொண்டார்.
ரோஹித் சர்மாவின் தனித்துவமான சாதனைகள் பட்டியலை இங்கே பார்ப்போம்:
ஐ.பி.எல்.லில் வெற்றிகரமான கேப்டன்:
ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். இவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக மகேந்திர சிங் தோனியும் 5 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:
ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸர் மன்னராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 472 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 597 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 483 சர்வதேச போட்டிகளில் 553 சிக்ஸர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:
ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் சாதனை அளப்பரியாதது. ஒருநாள் போட்டி வரலாற்றில் 264 ரன்கள் என்ற தனிநபர் ஸ்கோரை பதிவு செய்து உலக சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மா, 173 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 33 பவுண்டரிகள் உதவியுடன் 264 ரன்களை குவித்தார். இந்த சாதனையை எந்தவொரு வீரராலும் முறியடிப்பது என்பது முடியாத காரியம்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள்:
ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். தனது முதல் இரட்டை சதத்தை 2013 நவம்பர் 2ம் தேதியும், இரண்டாவது இரட்டை சதத்தை 2014 நவம்பர் 13ம் தேதியும், தனது மூன்றாவது இரட்டை சதத்தை 2017 டிசம்பர் 13ம் தேதியும் அடித்தார். 209, 264 மற்றும் 208* முறையே இரட்டை சதங்களை குவித்த ரோஹித் சர்மா மூன்று ஒருநாள் இரட்டை சதங்களை அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் ஆவார்.
ஒருநாள் போட்டியில் அதிக பவுண்டரிகள்:
இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் என்ற வரலாற்று சாதனையை படைத்தபோது, இரட்டை சதத்தை அடித்ததோடு மற்றொரு சாதனையையும் படைத்தார். இந்த போட்டியின்போது ரோஹித் சர்மா மொத்தமாக 33 பவுண்டரிகளை விரட்டினார். இதுவும் கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனையாகும். ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 33 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தலா 25 பவுண்டரிகளுடன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக சதங்கள்:
2019 உலகக் கோப்பையில் ஐந்து சதங்கள் அடித்தார் ரோஹித் சர்மா. இந்த தனித்துவமான மைல்கல்லை எட்டிய முதல் வீரரும் ரோஹித்தான். இவருக்கு அடுத்தபடியாக ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தலா 4 சதங்களுடன் இலங்கையின் குமார் சங்கக்கார மற்றும் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.