Virat kohli: பொன்னியின் செல்வனாக மாறிய சாதனைகளின் நாயகன் விராட் கோலி
"ஃபார்ம்" தற்காலிகமானது "க்ளாஸ்"தான் நிரந்தரமானது என்பதற்கு சிறந்த உதாரணம் விராட் கோலி. புடம்போட்ட அவரது திறமை, வைரம் போல் தற்போது பளிச்சிடுவது, அவருக்கு மட்டுமல்ல, கிரிக்கெட்டிற்கே அழகு சேர்க்கிறது என்றால் மிகையில்லை.
விராட் கோலி, "கிங்" கோலியாக மாறி பல காலம் ஆகிவிட்டது. ஆனால், இதே விராட் கோலியை, 4 மாதங்களுக்கு முன்பு வரை, இவர் தேவையா, தொடர்ந்து சொதப்புகிறாரே, ஆடிய ஆட்டமெல்லாம் முடிந்துவிட்டதா, மற்றவர்களுக்கு வழிவிடட்டும் என சொல்லாத குறைதான்... அந்த அளவுக்கு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்கேற்ப விராட் கோலியின் ஆட்டமும் சொதப்பலாகவே இருந்தது.
உலகை பல்வேறு வகைகளில் தலைகீழாக புரட்டிப்போட்ட கொரோனாவுக்கு கோலியும் தப்பவில்லை. அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், அதன் பாதிப்பு எப்படி மற்றவர்களை வாட்டி எடுத்ததோ, அப்படித்தான், விராட் கோலியும் ஒரு 50 ரன் எடுக்கக்கூட பிரம்ம பிரயத்தனம் செய்துக் கொண்டிருந்தார். எப்படி ஆடினாலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து, கொண்டாடப்பட்ட ரசிகர்களாலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டப்படும் சூழல் ஏற்பட்டது. அப்போதுதான், ஒரு சிறு ஓய்வு எடுத்துக் கொண்ட விராட் கோலி, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மீண்டும் விளையாட வந்தார்.
வந்தவேகத்திலேயே, தன்னுடைய "ஃபார்ம்" என்பது தற்காலிகமானது... ஆனால், தன்னுடைய "க்ளாஸ்" என்பது நிரந்தரமானது என்பதை எடுத்துச் சொல்லும் வகையில், விளாசித் தள்ளினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து, தன்னுடைய நீண்ட நாள் "100 ரன்கள்" காத்திருப்பிற்கு பதில் சொன்னார் சதங்களின் நாயகன். அதே வேகத்தில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார் விராட் கோலி.
தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இருபது ஓவர் உலகக் கோப்பையில், இந்தியாவிற்கான முதல் ஆட்டமே பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்து, அதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தாம் என்றுமே கிரிக்கெட்டின் ராஜாதான் என்பதை நிருபித்து, "கிங்" கோலி, அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்து, ஆட்டமிழக்காமல் இருந்து, இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்தார். சுனீல் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் முதல் இன்றைய ரோகித் சர்மா வரை, அனைவருமே, விராட் கோலியின் ஆட்டத்தை தலைமேல் வைத்து கொண்டாடினர். இந்திய ஜாம்பவான்கள் மட்டுமல்ல, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் முதல் பல்வேறு சர்வதேச நட்சத்திரங்களும் பாராட்டினர்.
அடுத்த போட்டியில், நெதர்லாந்திற்கு எதிராக, ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 11 பந்துகளில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில், மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார் விராட் கோலி. 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து, இந்தியஅணிக்கு பலம் சேர்த்தார். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தமட்டில், விளையாடிய 4 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் எடுத்து, இதுவரை 220 ரன்கள் குவித்துள்ளார். அதுவும் 3 முறை ஆட்டமிழக்காமல் இருந்ததால், இந்த உலகக் கோப்பையில் விராட் கோலியின் தற்போதைய சராசரி 220. இதுவே மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம்.
இவற்றை விட, தற்போது இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலியின் புதிய சாதனை என்னவென்றால், உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்பதுதான். இலங்கையின் மகிலா ஜெயவர்த்தனே, 31 ஆட்டங்களில் 1016 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. அதைத்தான் தற்போது விராட் கோலி முறியடித்து, தற்போது வரை 1065 ரன்கள் எடுத்துள்ளார். அதுவும் குறைந்தபட்ச, 25 ஆட்டங்களிலேயே அந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். இந்த உலகக் கோப்பை முடிவடைதற்குள் மேலும் ரன்களைக் குவித்து, இமாலய சாதனையாக மாற்றுவதற்கு பெரும் வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 2012-ம் ஆண்டுதான் முதன்முறையாக உலகக் கோப்பை இருபது ஓவர் போட்டிகளில் களமிறங்கிய விராட் கோலி, இன்றைய பங்களாதேஷ் ஆட்டத்தையும் சேர்த்து, 25 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். இதுவரை 1065 ரன்கள் எடுத்திருக்கிறார். அதில்13 அரை சதங்கள். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி, 11 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாதனைகளின் நாயகனாக மாறியுள்ள விராட் கோலி, நமது மண்ணின் பொன்னியின் செல்வனான, ராஜ ராஜசோழனைப் போல், அடுத்தடுத்து வெற்றிகளின் மூலம் சாதனைகளைப் புரிந்து, அனைவர் மனதிலும் நிரந்தரமாக குடியேறிவிட்டார். எனவேதான், கிரிக்கெட்டின் பொன்னியின் செல்வன் விராட் கோலியின் வெற்றிகளும் சாதனைகளும் என்றென்றும் கோஹினூர் வைரமாக ஒளிவீசிக் கொண்டே இருக்கும். அந்தச் சாதனைப்பட்டியலில், இந்த உலகக் கோப்பையும் அதற்கு அவரது ரன்குவிப்பும் காரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் கணக்கில் அடங்கா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.