Gambhir Slam KL Rahul: 'சதமா முக்கியம்? அணியின் வெற்றிதான் முக்கியம்' - கே.எல்.ராகுலை சாடிய கவுதம் கம்பீர்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா ஆடிய போட்டியில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது விராட்கோலி – கே.எல்.ராகுல் ஜோடி அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.
சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல்
இந்த போட்டியில் விராட்கோலி 85 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு கே.எல்.ராகுல் பதட்டமின்றி ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 97 ரன்களை விளாசியபோதே இந்திய அணி இலக்கை எட்டியது. சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு, முதலில் பவுண்டரியும், பின்பு சிக்ஸரும் விளாசி சதம் அடிக்க நான் விரும்பினேன். அடுத்த முறை சதம் அடிப்பேன் என்று நம்புகிறேன் என்றார்.
இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது கே.எல்.ராகுல் பவுண்டரி, சிக்ஸர் அடித்து சதத்தையும் எட்டுவார், இந்தியாவையும் வெற்றி பெற வைப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பவுண்டரிக்கு குறி வைத்து அடித்த பந்தே சிக்ஸருக்கு சென்றது. இதனால், இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆனால், சதத்தை தவறவிட்ட அதிருப்தி கே.எல்.ராகுல் முகத்தில் மைதானத்திலே தெரிந்தது.
கம்பீர் சாடல்:
இந்த நிலையில். கே.எல்.ராகுல் சதத்தை தவறவிட்டதன் காரணமாக வருத்தப்பட்டதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்கள் விளாசியவருமான கவுதம் கம்பீர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நீங்கள் 30, 40 அல்லது 140 ரன்கள் கூட எடுக்கலாம். ஆனால், இறுதியில் அணி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது முக்கியம். சாதனைகள் மீதான ஆர்வத்தின் காரணமாகவே நாம் பல ஆண்டுகளாக ஐ.சி.சி. தொடர்களை வெல்லவில்லை என்று நான் நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் சதம் அடித்தீர்களா? அல்லது முடிவில் என்ன ரன் அடித்தீர்கள் என்பது முக்கியமில்லை. இறுதியில் அணி வெற்றி பெற்றதா? என்பதே முக்கியம். அணிக்காக நீங்கள் இறுதிவரை களத்தில் நின்று வெற்றி பெற வைக்கிறீர்களா என்பதே முக்கியம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய கே.எல்.ராகுல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான சதம் அடித்து தனது ஃபார்மை நிரூபித்தார். அதே ஃபார்முடன் நடப்பு உலகக்கோப்பையிலும் அவர் ஆடியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் கேப்டனாக ஆடும் லக்னோ அணியின் வழிகாட்டியாக உள்ளார் கம்பீர். 2007 டி20 உலகக்கோப்பையை வென்ற அணி, 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இரண்டிலும் ஆடிய வீரர் என்ற பெருமைக்குரியவர் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தலைமையில் 2 முறை ஐ.பி.எல். கோப்பையை கொல்கத்தா அணி வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.