"உங்க இடத்தில் வேற யாராவது விளையாடினால் கஷ்டமாகத்தான் இருக்கும்”: ராகுலுக்கு காம்பீர் அட்வைஸ்
கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் வருங்கால கேப்டனாக பார்க்கப்பட்டாலும், சமீபகாலமாக அவரது மோசமான பார்ம் காரணமாக இந்திய அணி வாய்ப்பு வழங்கவில்லை.
பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்கத்தில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட கே.எல்.ராகுல், பார்ம் காரணமாக தனது பதவியை இழந்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 அணியின் விளையாடும் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். கே.எல்.ராகுலின் திறமை குறித்து எப்போதும் சர்ச்சைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது. முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் இவரின் பார்ம் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
கவுதம் காம்பீர்:
கடந்த 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சொதப்பிய கே.எல்.ராகுல், அதன்பிறகு எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடவில்ல. ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும், டெஸ்டில் துணை கேப்டனாகவும் இருந்து, பின்னர் விளையாடும் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில் கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதுபோன்ற சூழ்நிலையை சந்திக்க நேரிடும். தொடக்கம் முதல் இறுதிவரை தொடர்ந்து ரன் குவித்த கிரிக்கெட் வீரர்தான் வேண்டுமென்று நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது நல்லதுதான். ஆனால், இது வீரர்களை காயப்படுத்தும். உங்கள் இடத்தில் வேறொருவர் விளையாடுவதை பார்க்கும்போதும், நீங்கள் அவர்களுக்கே தண்ணீர் கொடுக்கும்போது அது காயப்படுத்தும்.
கே.எல். ராகுல் அணியை வழிநடத்தும் போது, அவர் யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ராகுல் ஐபிஎல் தொடரில் ஐந்து முறை 500க்கு அதிகமான ரங்களை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் டி20 அணியிலும், டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்றால், வரும் ஐபிஎல் தொடரை உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைத்து கொள்ளுங்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரன் அடிப்பதை நாடு பார்க்க விரும்புகிறது. அந்த நேரத்தில் என்னால் ரன் அடிக்க முடியுமா என்று யோசிக்க வேண்டாம். ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை, 400 ரன்கள் எடுத்து உங்களை நிரூபித்தாலே போதுமானது.
ஐபிஎல் - கே.எல்.ராகுல்:
கே.எல்.ராகுல் கடந்த ஐந்து சீசன்கள் விளையாடி நான்கு சீசனில் 600க்கு அதிகமான ரன்களை குவித்துள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு 600 ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் 593 ரன்கள் எடுத்திருந்தார். கடந்த சீசனில் லக்னோ அணிக்கு தலைமை தாங்கிய கே.எல்.ராகுல் நாக் அவுட் சுற்றுவரை அழைத்து சென்றார். லக்னோ அணியின் ஆலோசகராக காம்பீர் கடந்த ஆண்டு முதல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.