KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், பந்துவீச்சு பயிற்சியாளருமான ப்ராவோ கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமைக்குரிய அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ். சி.எஸ்.கே. அணியின் முக்கிய தூணாக திகழ்ந்தவர் ஆல்ரவுண்டர் ப்ராவோ. சென்னை அணிக்காக மிக நெருக்கடியான பல போட்டிகளில் அபாரமாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து அணியை வெற்றி பெறவைத்தார்.
கொல்கத்தா அணி ஆலோசகர்:
அணியில் வீரராக இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ப்ராவோ கடந்த சீசனில் பணியாற்றினார். இந்த நிலையில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆலோசகராக ப்ராவோ நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் ஆலோசகராக பணியாற்றி வந்த கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், கம்பீரின் இடத்திற்கு ப்ராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
Say hello to our new Mentor, DJ 'sir champion' Bravo! 💜
— KolkataKnightRiders (@KKRiders) September 27, 2024
Welcome to the City of Champions! 🎶🏆 pic.twitter.com/Kq03t4J4ia
சென்னை அணியின் தூண்களில் ஒருவராக திகழ்ந்த ப்ராவோ தற்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
கம்பீர் இடத்தில் இனி ப்ராவோ:
நீண்ட வருடங்களாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றாமல் இருந்த கொல்கத்தா அணிக்கு, அந்த அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்த கம்பீர் கடந்தாண்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டது முதலே தொடரில் கே.கே.ஆர். ஆதிக்கம் செலுத்தியது.
இறுதிப்போட்டியில் அந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய சன்ரைசர்ஸ் அணியை சொற்ப ரன்களில் சுருட்டி மிக எளிதாக வென்று கோப்பையை வென்றது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை காட்டிலும் கவுதம் கம்பீரே அனைவராலும் பாராட்டப்பட்டார்.
சி.எஸ்.கே. தூண்:
இந்த சூழலில், அவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கொல்கத்தா அணியின் ஆலோசகராக யார் நியமிக்கப்படுவார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலிலே ப்ராவோ அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ப்ராவோ தொடர்ந்து ஆடி வந்தாலும், கரிபீயன் லீக் தொடரில் கே.கே.ஆருக்கு சொந்தமான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த 10 வருடத்திற்கு மேலாக ப்ராவோ ஆடியுள்ளார்.
ப்ராவோ கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது சென்னை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டம் வென்ற 5 முறையில் 3 முறை அவர் வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.
40 வயதான ப்ராவோ 161 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1560 ரன்களை 5 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 70 ரன்களை எடுத்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான ப்ராவோ 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2200 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 சதங்கள், 13 அரைசதங்கள் அடங்கும்.
164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 10 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 968 ரன்கள் எடுத்துள்ளார். 91 டி20 போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 1255 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 86 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 199 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 78 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.