இதை எதிர்பார்க்கல! இங்கிலாந்து அணிக்காக களமிறங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் மகன்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் மகன் களமிறங்கியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது.
இங்கிலாந்து அணிக்காக களமிறங்கிய ஆர்.பி.சிங் மகன்:
இலங்கை அணியினர் பேட்டிங் செய்தபோது இங்கிலாந்து அணிக்காக ஹாரி சிங் என்ற வீரர் ஃபீல்டிங் நின்றார். அந்த அணியின் ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக இவர் சில ஓவர்கள் ஃபீல்டிங் செய்தார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் மகன் ஆவார்.ஹாரி சிங்கின் தந்தை ஆர்.பி.சிங் கடந்த 1986ம் ஆண்டு இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஒருநாள் போட்டியில் அவர் ஆடியுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி.சிங் 1986ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற தொடரில் பந்துவீசியுள்ளார். அதேசமயம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் பங்கேற்றுள்ளார். 59 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் திறமை வாய்ந்த அவர் 1413 ரன்களும் எடுத்துள்ளார்.
1980ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கிய ஆர்.பி.சிங் சீனியர் 1991ம் ஆண்டு துலீப் டிராபி வரை இந்தியாவில் ஆடியுள்ளார். அவர் மத்திய மண்டல மற்றும் வடக்கு மண்டல அணிகளுக்காக ஆடியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இவர் தனது குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டிற்காக சென்றுள்ளார்.
ஜொலிப்பாரா ஹாரி சிங்:
அங்கு அவர் லங்காஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்காக பணியாற்றினார். தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ஹாரி சிங் லங்காஷையர் அணிக்காக ஆடியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டிற்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் ஆடியுள்ள ஹாரிசிங் தற்போது இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். எதிர்காலத்தில் அந்த நாட்டிற்காக ஜொலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்திய அணிக்காக 2000-த்தின் பிற்பகுதியில் ஆர்.பி.சிங் என்ற இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து அணி 2வது நாளான நேற்று முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்களுடனும், அட்கின்ஸன் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணிக்காக அந்த அணியின் கேப்டன் டி சில்வா மட்டும் தனி ஆளாக 74 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.