ENG Vs NED World Cup 2023: சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு இருக்கா? இங்கிலாந்து - நெதர்லாந்து இன்று மோதல்
ENG Vs NED World Cup 2023: உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
ENG Vs NED World Cup 2023: புனேவில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 39 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அஸ்திரேலிய அணியும் தனது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடுமையாக மோதி வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முறையே கடைசி இரண்டு இடங்களில் உள்ள, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நெதர்லாந்து - இங்கிலாந்து மோதல்:
புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியுற்றுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் நெதர்லாந்து அணி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. அரையிறுதிக்கான வாய்ப்பை இரண்டு அணிகளும் இழந்துவிட்ட நிலையில், கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றால் தான் புள்ளிப்பட்டியலில் குறைந்தபட்சம் 8வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. தவறினால், 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்து அணியால் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பலம் & பலவீனங்கள்:
இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தாலும், களத்தில் சிறப்பாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றனர். நடப்பு சாம்பியன் என்பதை உணர்த்தும் விதமாக நடப்பு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி செயல்படாதது, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுமுனையில் நெதர்லாந்து அணிக்கு சர்வதேச போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும், விளையாடும் அனைத்து போட்டிகளிலும் முழு திறமையை வெளிப்படுத்துகிறது. ஏதாவது ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்காதது அந்த அணியின் பலமாக கருதப்படுகிறது. பந்துவீச்சிலும் இளம் வீரர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகின்றனர். இதனால், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தரவும் வாய்ப்புள்ளது.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அனைத்திலும் நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.
மைதானம் எப்படி?
புனே மைதானத்தில் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில், முதலில் பந்துவீசிய அணிகளே மூன்றில் வெற்றி பெற்றுள்ளன. சராசரி முதல் இன்னிங்ஸ் 300+ ரன்கள் எடுக்கப்படுகின்றன. மைதானத்தின் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு 351 ரன்கள். டாஸ் வென்ற கேப்டன் மைதானத்தின் சாதனையை மனதில் வைத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே வாய்ப்புள்ளது.
உத்தேச அணி விவரங்கள்:
இங்கிலாந்து
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்
நெதர்லாந்து:
வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்