WTC Finals: காயத்தால் தத்தளிக்கும் வீரர்கள்? கே.எல். ராகுலுக்கும் காயமாம்.. இந்திய அணியின் நிலை என்ன..?
ராகுலின் காயத்தின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், WTC இறுதிப்போட்டி நெருங்கும் நிலையில், அவரது காயம் தற்போது இந்தியாவிற்கு நல்லதல்ல.
![WTC Finals: காயத்தால் தத்தளிக்கும் வீரர்கள்? கே.எல். ராகுலுக்கும் காயமாம்.. இந்திய அணியின் நிலை என்ன..? Continuing injuries threatening the team What will be India situation in WTC finals WTC Finals: காயத்தால் தத்தளிக்கும் வீரர்கள்? கே.எல். ராகுலுக்கும் காயமாம்.. இந்திய அணியின் நிலை என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/02/f6edceb17f1ca0baf21c239ded82e2921683008652480109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நேற்று நடந்த RCB மற்றும் LSG அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலில், KL ராகுல் பீல்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அவர் தனது தொடையை பிடித்துக்கொண்டு மைதானத்திற்கு வெளியே நடந்து செல்வதைக் காண முடிந்தது. ஆனாலும் வேறு வழியின்றி 11வது இடத்தில் இறங்கி பேட்டிங் செய்தார். இருந்தும் ஓட முடியாததால் கடைசி ஓவர் ஸ்டரைக்கிற்கு செல்ல முடியாமல் ஆட்டம் நிறைவடைந்தது. அவரது காயத்தின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அவரது காயம் தற்போது இந்தியாவிற்கு நல்லதல்ல.
உனத்கட் காயம்
அவர் மட்டுமின்றி, ஜெய்தேவ் உனத்கட் நெட்ஸில் பந்துவீசும்போது கீழே விழுந்து தோளில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருப்பதால் இந்திய அணி மாற்று வீரர்களை தேட வேண்டிய நிலைக்கு வருமோ என்ற அச்சம் உள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட விபத்தால், அணியில் ரிஷப் பண்ட் இந்த ஆண்டு முழுவதும் விளையாட முடியாத சூழலில் உள்ளார். இதனால் கேஎஸ் பாரத் அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்துள்ளார்.
அதிகரிக்கும் காயம் குறித்த கவலை
பும்ராவுக்கு செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சையால் ஓய்வில் இருப்பதால் அணியில் சேர்க்கப்பட்ட ஜெயதேவ் உனத்கட்டும் இப்போது காயம் அடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது. மாற்று வீரர்களாக தேர்தெடுக்கப்பட வேண்டிய லிஸ்டில் உள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் அவ்வபோது காயமடைந்து வருவதால் பிசிசிஐ-க்கு கவலை அதிகரித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அணியிலும் உள்ள வீரர்கள் குறித்த கவலை அதைவிட அதிகமாக உள்ளது. இறுதிப்போட்டியை மனதில் வைத்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக விளையாட வேண்டியது அவசியமாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7-ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை இங்கிலாந்தில், தி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் தங்களது அணி வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளனர்.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, ரகானே, கேஎல் ராகுல், கே.எஸ் பரத், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், உனத்கட்
ஆஸ்திரேலிய அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், டோட் மர்பி மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)