Chris Cairns: ‛நான் உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் தான்...’ வீல் சேருக்கு மாறிய கெய்ன்ஸ் உருக்கம்!
Chris Cairns: ‛‛எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. நான் மீண்டும் நிற்பேனா... நடப்பேனா என்று கூட தெரியாது. ஆனாலும் நிற்பேன், நடப்பேன் என்கிற நம்பிக்கை மட்டும் என்னுள் இருக்கிறது,’’ -கெய்ன்ஸ்
90 கிட்ஸ்களுக்கு சில கிரிக்கெட் வீரர்கள் என்றும் நினைவில் இருப்பார்கள். அப்படிபட்டவர்களில் ஒருவர் தான் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் கெயின்ஸ். 51வயதாகும் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் இதுவரை 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்றவர். இந்திய சேம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்ற கெயின்ஸ் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. 2015ம் ஆண்டில் இவர் அந்தப் புகாரில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார்.
தனது மூன்றாவது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதயத்திலிருந்து வயிற்றுப்பகுதிக்குச் செல்லும் ரத்த நாளம் கிழிந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியது. அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உயிரைக் காப்பாற்ற இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தபோது முதுகுத் தண்டுவடத்தில் பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கெயின்ஸின் இரண்டு கால்களும் செயலிழந்தது. இதனை அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
கெயின்ஸின் இதயத்திலிருந்து வயிற்றுப் பகுதிக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் பெருந்தமணியின் உட்புறம் கிழிந்தது. பெருந்தமணி உடலின் மிக முக்கியமான ரத்த நாளம் என்பதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த நிலையில் செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினார் எனக் கூறப்பட்டது. உடல்நிலை மோசமாக இருந்தாலும் கவலைக்கிடமாக இல்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதற்கிடையேதான் அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்வது என்பது முடிவானது. அதற்கான அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்பட்டு அவரது கால்கள் செயலிழந்தன. அவரது கால்களுக்குச் சிகிச்சை தர முதுகுத் தண்டுவட சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிறிஸ் கெயின்ஸுக்காகப் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் தங்களது பிரைவசிக்கு மதிப்பளித்த நபர்களுக்கும் நன்றி என்றும் கெயின்ஸின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து சிகிச்சையில் இருந்த கெயின்ஸ், தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். மூன்று மாதங்களுக்கு பின் வீல் சேருக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது ஜிம் சென்று சிறிய பயிற்சிகளை செய்து வருகிறார். இது தொடர்பாக கெயின்ஸ் கூறுகையில், ‛‛எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. நான் மீண்டும் நிற்பேனா... நடப்பேனா என்று கூட தெரியாது. ஆனாலும் நிற்பேன், நடப்பேன் என்கிற நம்பிக்கை மட்டும் என்னுள் இருக்கிறது. வாழ்க்கையில் முன்நோக்கி செல்வது தான் ஒரே வழி. நான் உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் தான்,’’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.
‛‛உடல் அளவில் தான் அவர் பலவீனமாக உள்ளார். மனதளவில் அவர் பலமாக உள்ளார். விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்ப வருவார்,’’ என்று அவரது மனைவி மெலானி கூறியுள்ளார்.
மேலும் படிக்க : குழந்தைகளுக்கு எதிரான சைபர் க்ரைம் குற்றங்கள் 400 சதவிகிதம் அதிகரிப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்