Champions Trophy கோப்பையால் வந்த சர்ச்சை.. பாகிஸ்தான் திட்டத்தை முறியடித்த பிசிசிஐ!
Champions Trophy கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எடுத்த செல்ல பாகிஸ்தான் திட்டமிட்டிருந்த நிலையில், பிசிசிஐ அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எடுத்த செல்ல பாகிஸ்தான் திட்டமிட்டிருந்த நிலையில், பிசிசிஐ-யின் எதிர்ப்பை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சாம்பியன்ஸ் டிராபி தொடர், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் தொடங்க உள்ளது. பொதுவாக, சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு, போட்டியின் கோப்பை பல இடங்களுக்கு எடுத்து செல்லப்படுவது வழக்கம்.
Champions Trophy-க்கு தொடர் சிக்கல்:
அந்த வகையில், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை, பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்த செல்ல பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. அதில், ஸ்கார்டு, முர்ரே மற்றும் முசாபராபாத் ஆகிய பகுதிகளும் இடங்கும். இந்த மூன்று பகுதிகளும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ளது.
எனவே, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எடுத்து செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே, பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இந்தியா கலந்து கொள்வது தொடர்பாக சர்ச்சை நிலவி வருகிறது.
கடைசியாக, கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. பின்னர் ஒரு சில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், நடப்பு தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் என்று ஐசிசி ஏற்கனவே அறிவித்தது.
பாகிஸ்தான் திட்டத்திற்கு எதிர்ப்பு:
ஆனால் ஐசிசியின் இந்த அறிவிப்புக்கு எதிராக பிசிசிஐ போர்க்கொடி தூக்கியது. பாகிஸ்தானில் இந்த தொடர் நடத்தப்பட கூடாது என பிசிசிஐ விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு ஒரு நாட்டில் நடத்த முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு ஏற்றார் போல், பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப இந்திய அரசும் ஒப்புதல் தரவில்லை. இந்தியா பங்கேற்க மறுத்துள்ளதால் ஏற்படும் பொருளாதார இழப்பை காரணம் காட்டி பிசிசிஐ-க்கு எதிராக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு, மும்பையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் விரிசல் அடைந்தது. குறிப்பாக, இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வருகிறது.
கடைசியாக, கடந்த 2012ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2008ஆம் ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. மற்றபடி, ஐசிசி போட்டிகள் வழியாக மட்டுமே இரண்டு அணிகளும் மோதி கொள்கின்றன.