துபாயில் Champions Trophy? விடாபிடியாக இருக்கும் பிசிசிஐ.. பாகிஸ்தான் எடுத்த பிரம்மாஸ்திரம்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேற பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் அடுத்தாண்டு நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்தியா மறுத்துள்ள நிலையில், அந்த தொடரில் இருந்து வெளியேற பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியேறும் பாகிஸ்தான்:
இந்தியா பங்கேற்க மறுத்துள்ளதால் ஏற்படும் பொருளாதார இழப்பை காரணம் காட்டி பிசிசிஐ-க்கு எதிராக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடைசியாக, கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. பின்னர் ஒரு சில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்ட இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் என்று ஐசிசி ஏற்கனவே அறிவித்தது. ஆனால் ஐசிசியின் இந்த அறிவிப்புக்கு எதிராக பிசிசிஐ போர்க்கொடி தூக்கியது.
பாகிஸ்தான் இந்த தொடர் நடத்தப்பட கூடாது என்றும் பிசிசிஐ விரும்புவதாக அப்போதே தக்வல்கள் வெளியாகின. அப்படி பாகிஸ்தானில் இந்த தொடரை நடத்துவதை ஐசிசி விரும்பினால், இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு ஒரு நாட்டில் நடத்த முன் வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. தனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவை விளையாட வைப்பதற்குப் பல படிகள் இறங்கி வந்தது.
உதாரணமாக பாகிஸ்தான் இந்தியா எல்லையில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய போட்டிகளை நடத்தலாம் எனவும் இந்திய அணியின் வீரர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் எனவும் கூறி வந்தது. ஆனால், தற்போது பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்), ஐசிசிக்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கடிதம் எழுதி உள்ளது.
துபாயில் Champions Trophy?
அதாவது, நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அணி பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு போட்டியும் விளையாடாது எனவும் இந்திய அணியின் போட்டிகளைத் துபாய்க்கு மாற்றி வைக்க வேண்டும் எனவும் பிசிசிஐ, ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது.
பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள பிசிசிஐ-க்கு இந்திய அரசு அனுமதி வழங்காத நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேற பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டியை நடத்தாமல் போனதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை காரணம் காட்டி பிசிசிஐ-க்கு எதிராக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாயில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2008ஆம் ஆண்டு, மும்பையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் விரிசல் அடைந்தது. குறிப்பாக, இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வருகிறது.
கடைசியாக, கடந்த 2012ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2008ஆம் ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. மற்றபடி, ஐசிசி போட்டிகள் வழியாக மட்டுமே இரண்டு அணிகளும் மோதி கொள்கின்றன.