Brett Lee Best XI: ப்ரட்லீயின் சிறந்த ப்ளேயிங் லெவன்: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு "நோ"..! இந்திய வீரர்கள் கலக்கல்..
பிரட் லீயின் சிறந்த XI இல் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர், ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் கூட இல்லை என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம்.
முன்னாள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிரட் லீ, சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து சிறந்த லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். நான்கு இந்தியர்கள், இரண்டு பாகிஸ்தானியர்கள், ஒரு நியூசிலாந்து வீரர் மற்றும் நான்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்த அவர் ஒரு ஆஸ்திரேலிய வீரரை கூட தேர்வு செய்யாததுதான் ஆச்சர்யமளிக்கும் விஷயம்.
தொடக்க ஆட்டக்காரர்கள்
நவம்பர் 13 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தனது அணிக்காக அதிகபட்சமாக 225 ரன்கள் எடுத்தார் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் 212 ரன்கள் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். தொடரின் சிறந்த ஐசிசியின் அணியில் சேர்க்கப்பட்டுள்ள இருவரும் ப்ரெட் லீயின் சிறந்த லெவனிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள்
இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும், ஆறு இன்னிங்ஸ்களில் இருந்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக தொடர் நாயகன் விருதையும் வென்ற சாம் கரனும் ப்ரெட் லீயின் பட்டியலில் இடம் பிடித்தார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித், இந்த தொடரில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தாலும், அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் அவரது அணியில் இடம்பெற்றார்.
பாகிஸ்தான் வீரர்கள்
நட்சத்திர பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி மற்றும் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் ஆகியோரும் லீயின் சிறந்த XI அணியில் இடம்பெற்றுள்ளனர். இரு வீரர்களும் தலா 11 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றனர். நியூசிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ், இலங்கைக்கு எதிராக 104 ரன்கள் எடுத்தது உட்பட ஐந்து இன்னிங்ஸ்களில் 201 ரன்கள் எடுத்தார். அவரும் ப்ரெட் லீயின் அணியில் இடம் பிடித்தார்.
இந்திய அணி வீரர்கள்
பிரட் லீயின் சிறந்த XI இல் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர், ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் கூட இல்லை. இரண்டாவது அரையிறுதி மோதலில் இங்கிலாந்துக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியுடன் இந்தியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தாலும், அணிக்கு சில இந்த தொடரில் பல சாதகமான அம்சங்கள் இருந்தன. சூரிகுமார் யாதவ் 189.68 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் 239 ரன்கள் எடுத்தார். அதே போல விராட் கோலியும் சிறந்த பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தினார்.
எதிர்பார்த்தபடி, இரு வீரர்களும் லீயின் சிறந்த XI இன் ஒரு பகுதியாக உள்ளனர். மேலும் ப்ரெட் லீ இந்தியாவில் இருந்து தனது பட்டியலில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோரையும் சேர்த்துள்ளார். அர்ஷ்தீப் 10 விக்கெட்டுகளையும், ஹர்திக் 128 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தியா இறுதிப் போட்டிக்கு வரத் தவறியதால் இரு வீரர்களும் ஐசிசியின் போட்டித் தொடரின் அணியில் இடம் பெறத் தவறினர், இருப்பினும் ஹர்திக் பாண்டியா 12 வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
பிரட் லீயின் சிறந்த லெவன்: அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கிளென் பிலிப்ஸ், ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான், சாம் குர்ரன், ஷஹீன் அப்ரிடி, அர்ஷ்தீப் சிங், அடில் ரஷித்