ஸ்கெட்ச் 'தெ.ஆ'க்கு இல்லை, உலகக் கோப்பைக்கு! இளம் படையை உருவாக்கும் இந்திய அணியின் ப்ளான்!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய டி20 அணி விரைவில் தொடங்க உள்ள உலககோப்பைத் தொடரை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்படுகிறது.
மும்பை மற்றும் புனேவில் நடைபெற்ற டாடா ஐ.பி.எல். தொடரில் பல இளம் வீரர்கள் அற்புதமாக ஆடினர். குறிப்பாக, இந்திய அணிக்காக இதுவரை ஆடாத வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விரைவில் தொடங்க உள்ள டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோகித்சர்மா, விராட்கோலி, பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஜடேஜா ஆடாத நிலையில் ஆல் ரவுண்டர் அஸ்வின் கழட்டிவிடப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக ஆடியும் ஷிகர்தவானுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான்கிஷான், தீபக்ஹூடா, வெங்கடேஷ் அய்யர், பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான், அர்ஷ்தீப்சிங் மற்றும் உம்ரான் மாலிக்கி ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஓரளவு அனுபவமுளள இளம் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யரும், ரிஷப்பண்டும், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் ஆகியோர் களமிறங்குகின்றனர். கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணியில் அனுவ வீரர்களாக தினேஷ் கார்த்திக்கும், புவனேஷ்குமாரும் உள்ளனர்.
பி.சி.சி.ஐ. தற்போது அறிவித்துள்ள இந்த அணி விரைவில் தொடங்க உள்ள உலககோப்பையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது நன்றாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் உலககோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரமவைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த முறை உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியிலே இந்தியா தோற்றது. மேலும், தொடரில் இருந்தும் வெளியேறியது.
இதன்காரணமாக, வரும் உலககோப்பை டி20 தொடரில் இளமையான அதிரடியான இந்திய அணியை உருவாக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. முதல் டி20 உலககோப்பையை வென்ற இளமை ததும்பிய இந்திய அணியைப் போல இளமையான அணியை உருவாக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மூத்த வீரர்களான ரோகித், விராட்கோலி, ஜடேஜா, பும்ரா ஆகியோர் தவிர பிற சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, முற்றிலும் இளமையான அணியாக உலககோப்பைக்கு தயாராக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. தோனியின் இடத்திற்கு ஒரு அருமையான மாற்றாக தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளதால் அவரும் உலககோப்பை தொடரில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னோட்டமாகதான் அவர் தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க தொடருக்கு தயாராகியுள்ள இளம் இந்திய அணி உலககோப்பையை வெல்லும் பலமான அணியாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.