BCCI: உலக கிரிக்கெட்டே வியந்து பார்க்கும் அதிசயம்.. அடுத்த 5 ஆண்டுகளில் பிசிசிஐக்கு கொட்டப்போகும் பணமழை!
அடுத்த ஐந்து வருடங்களில் இந்திய அணி சொந்த மண்ணில் சுமார் 88 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனை ஒளிபரப்பு செய்யும் டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் காரணமாக, பிசிசிஐ ஒரு பில்லியன் டாலர்களை சம்பாதிக்க இருக்கிறது.
ஆசியக் கோப்பை 2023க்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023 உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது. இந்த உலகக் கோப்பைக்கு பிறகு, இந்திய அணி 2028 வரை மிகவும் பிஸியான அட்டவணையை வைத்திருக்கிறது. இந்திய அணி விளையாடுவதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிறைய பலன் அடையப் போகிறது. அடுத்த ஐந்து வருடங்களில் இந்திய அணி சொந்த மண்ணில் சுமார் 88 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனை ஒளிபரப்பு செய்யும் டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் காரணமாக, பிசிசிஐ ஒரு பில்லியன் டாலர்களை சம்பாதிக்க இருக்கிறது.
இந்திய அணி 88 ஹோம் மேட்ச்களின் டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை தனித்தனியாக விற்பதன் மூலம், பிசிசிஐ சுமார் ரூ.8200 கோடியைத் தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வருகின்ற தொடர்களில் புதிய சுழற்சியின் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 உள்நாட்டுப் போட்டிகள் (ஐந்து டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் 10 டி20) மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 18 போட்டிகள் (10 டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள்) விளையாட உள்ளன. அதாவது இந்திய அணி மொத்தமாக 25 டெஸ்ட், 27 ஒருநாள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
கடந்த ஐந்தாண்டு சுழற்சியில் (2018 முதல் 2023 வரை), BCCI ஸ்டார் இந்தியாவிடமிருந்து $ 944 மில்லியன் (சுமார் ரூ. 6138 கோடி) பெற்றுள்ளது, இதில் ஒரு போட்டிக்கு ரூ.60 கோடி (டிஜிட்டல் மற்றும் டிவி) அடங்கும்.
இந்த முறை பிசிசிஐ டிஜிட்டல் மற்றும் டிவி உரிமைகளுக்கு தனித்தனி ஏலத்தை விட இருக்கிறது. ஐபிஎல்லின் போது ஊடக உரிமைகள் மூலம் ரூ.48,390 கோடி சம்பாதித்தது. இதில் டிஜிட்டல் உரிமைகளை ரிலையன்ஸ் நிறுவனமும், டிவி உரிமையை ஸ்டார் டிவியும் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உள்நாட்டுப் போட்டிகளுக்கு டிஸ்னி-ஸ்டார், ரிலையன்ஸ்-வயாகாம் ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக ஏலத்தை எடுக்க முயற்சிக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில், இந்தியா வெற்றிபெறவில்லை என்றால் விளம்பரங்களின் மூலம் வருகின்ற வருமானம் பாதிக்கப்படலாம். இதுகுறித்து தனியார் ஒளிபரப்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், "வருகின்ற சுழற்சியில் 25 ஹோம் டெஸ்ட்கள் நடைபெற உள்ளன. முந்தைய சுழற்சியைப் பார்த்தால், ஐந்தாவது நாள் வரை எத்தனை டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் என்பதை பொறுத்தே வருமானம் கணக்கிடப்படும். கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகல் மூன்றே நாட்களில் முடிந்துவிட்டன” என்று தெரிவித்தார்.
கடந்த ஐபிஎல் போட்டியின் ஊடக உரிமையை ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் பெற்றுள்ளது தெரிந்ததே. மேலும், ஸ்டார் டிவியும் உரிமையை வென்றது, இது பிசிசிஐ ரூ.48,390 கோடிகளை ஈட்டியது. ஐபிஎல்லைப் போலவே, டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளுக்கும் பிசிசிஐ தனித்தனி ஏலங்களை விடுத்துள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் ஏல அட்டவணையை பிசிசிஐ அறிவிக்கும். இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.